பட்டுப்புழு, வெட்டுக்கிளி உள்ளிட்ட 16 வகை பூச்சி இனங்கள் உண்பதற்கு ஏற்றவை என்று சிங்கப்பூர் உணவுப் பாதுகாப்புத் துறை அங்கீகரித்துள்ளது.
பூச்சி இனங்களில் 2100 இனங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் உணவுப் பொருளாக உண்ணப்படுகிறது.
இதில் இருந்து புரதச் சத்து உள்ளிட்ட சத்துக்கள் கிடைப்பதாகக் கூறப்படுகிறது என்ற போதும் இவை பெரும்பாலும் கறிக்காக வளர்க்கப்படும் கால்நடை தீவனமாகவே பயன்படுகிறது.
எறும்பு, வெட்டுக்கிளி, ஈசல், பாச்சை பூச்சி போன்றவை மெக்சிகோ, தாய்லாந்து மற்றும் கிழக்காசிய நாடுகளில் உணவு வகையாக உண்ணப்படுகிறது.
இதனையடுத்து உண்பதற்கு ஏற்ற பூச்சி இனங்களை கண்டறிய சிங்கப்பூர் உணவுப் பாதுகாப்புத் துறை கடந்த 2022ம் ஆண்டு கொள்கையளவில் முடிவெடுத்தது.
இந்த நிலையில் 16 வகை பூச்சி இனங்கள் உண்பதற்கு ஏற்றவை என்று ஜூலை 8 ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் அது தெரிவித்துள்ளது.
இந்த வகை பூச்சி இனங்களை உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ இறக்குமதி செய்யலாம் என்றும் ஆனால் அவை உணவுக்காக பண்ணை அமைப்புகளில் வளர்க்கப்பட்டவையாக இருக்கவேண்டுமே தவிர இன அழிவை ஏற்படுத்தும் வகையில் காடுகளில் இருந்து பிடித்துவரப்பட்டவையாக இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இவ்வகை உணவுகள் தரக்கட்டுப்பாட்டுக்குப் பிறகு விற்பனைக்கு அனுமதிக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.
உணவுப் பாதுகாப்புத் துறையின் இந்த அறிவிப்பை அடுத்து ஏற்கனவே கால்நடைகளுக்காக இதுபோன்ற பூச்சிகளை உணவுக்காக உற்பத்தி செய்து வரும் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.