விக்கிரவாண்டி

ன்று மாலை 5 மணியுடன் விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது.

கடந்த ஒருவார காலமாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை அனல் பறக்கிறது. இதில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர். கூட்டணியில் உள்ள திருமாவளவனும் திமுக வேட்பாளருக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, எதிர்க்கட்சிகள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

பாமக வேட்பாளரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டடோரும், அன்புமணி தனது குடும்பத்துடனும் விக்கிரவாண்டி தொகுதியில் தெருத்தெருவாக சென்று வாக்கு சேகரித்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்காக சீமானும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.

இன்று மாலை, 5 மணியுடன் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைகிறது.. எனவே அந்த நேரத்திற்கு பிறகு தேர்தல் ஆணைய விதிகளின் படி  யாரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக் கூடாது. மற்றும் தொகுதிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்று கடைசி நாள் என்பதால் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, பாமக தலைவர் அன்புமணி மற்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இன்றைய வாக்கு சேகரிப்பு தீவிரமாக இருக்கும் என கருதப்படுகிறது.