சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது என அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் சென்னை பெரம்பூரில் வசித்து வந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் தான் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்வையிட்டு விட்டு,  வெளியே வந்தார். அப்போது,   இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், அவர் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளது. மாலை 6.30 மணி அளவில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் இந்த கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டு உள்ளது.  இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் மற்றும் செம்பியம் போலீஸார், ஆம்ஸ்ட்ராங்கை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், 10 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். மேலும், சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அசம்பாவிதச் சம்பவங்களைத் தவிர்க்க பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில், அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் கண்னடங்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வன்முறை கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கிற சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், துயரத்தையும் தருகிறது. தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு கல்வி பயில, தொழில் தொடங்க, அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மிகுந்த சேவை மனப்பான்மையோடு பாடுபட்டவர். இதன் மூலம் அவர்களது நன்மதிப்பையும் பெற்று வந்தார்.

அமைதிப் பூங்காவாக இருக்கிற தமிழகத்தில் இத்தகைய படுகொலைகளை வன்முறையாளர்கள் நிகழ்த்துவது மிகுந்த வேதனைக்குரியது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு என்ன பின்னணி என்பதை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ஆம்ஸ்ட்ராங் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சி நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட செய்தியை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தொடர்ந்து இது போன்ற படுகொலை சம்பவங்கள் நடந்து வருவது அனைவரின் மத்தியிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த தசண்முகம் என்பவரும் படுகொலை செய்யப்பட்டார். இன்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் படுகொலை என்ற செய்திகள் தொடர்ந்து வருவது தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது என்பதற்கு ஒரு சாட்சி.
குண்டர்களால் வெட்டி சாய்க்கப்படுகின்ற அளவுக்கு காலச்சார சீரழிவு ஏற்பட்டு இருக்கின்றது. இது அத்தனைக்கும் காரணம் சட்ட ஒழுங்கு சீர்கேடும். கஞ்சா, டாஸ்மாக், கள்ளச்சாராயம், போன்ற போதை பொருள்களின் உபயோகம் அதிகமாக இருப்பதனால்தான் இதுபோன்று தொடர்த்து படுகொலைகள் நடந்து கொண்டு இருக்கிறது.

இந்த படுகொலை செய்தவர்கள் யார் என்பதையும் எதற்காக படுகொலை செய்தனர் என்பதை தமிழக அரசு காவல்துறை மூலம் கொலைக்கான காரணத்தை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் அந்த கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

ஒரு தேசிய கட்சியின் தலைவரே வெட்டி கொலை செய்யப்படுகிறார் என்றால் இன்று சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது என்ற கேள்வி அனைவரின் மனதில் மிக பெரிய பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனது இயக்கத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கும் பட்டியல் இன மக்களுக்கும் உழைத்து கொண்டு இருந்த அவரின் மறைவு செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

இது வன்மையாக கண்டிக்க கூடிய விஷயம், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கும் அந்த கழகத்தை சேர்ந்த தொண்டர்களுக்கும் அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தார்க்கும். நண்பர்களுக்கும் தேமுதிக சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்” என்று பிரேமலதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்

நடிகரும், தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? பிஎஸ்பி தலைவர் மாயாவதி, எடப்பாடி, திருமா உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்…

சென்னையில் பயங்கரம்: பட்டப்பகலில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை!

சென்னையை உலுக்கிய கொலை சம்பவம்: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் 8 பேர் போலீசில் சரண்… பதற்றம்..