தென் சென்னையின் பல்வேறு பகுதிகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் நிறுத்தப்படும் என்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) தெரிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போதிய அளவு குடிநீரை சேமித்து வைக்க வேண்டும் என பொதுமக்களை வலியுறுத்தியுள்ள குடிநீர் வாரியம் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மூன்று மண்டலங்களுக்கு அவசரச் சூழ்நிலையில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
நெம்மேலியில் உள்ள உப்புநீக்கும் ஆலையில் ஜூன் 30, காலை 9 மணி முதல் ஜூலை 1, 9 மணி வரை வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
இதனால், அடையாறு (மண்டலம் 13), பெருங்குடி (மண்டலம் 14) மற்றும் சோழிங்கநல்லூர் (மண்டலம் 15) ஆகிய மூன்று மண்டலங்கள் மற்றும் திருவான்மியூர், இந்திரா நகர், கொட்டிவாக்கம், பல்லவாக்கம், பெருங்குடி, எழில் நகர், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம் மற்றும் கண்ணகி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
அவசர தேவைக்கு 044-4567 4567 என்ற எண்ணிற்கோ அல்லது https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து குடிநீர் பெறலாம் என்று கூறியுள்ளது.
குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் குறைந்த அழுத்தம் உள்ள பகுதிகளில் வழக்கம் போல் எந்த தடையுமின்றி குடிநீர் விநியோகம் செய்ய முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.