இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

இத்தனை ஆண்டுகளாக சபாநாயகர் தேர்வு ஒருமனதாக நடைபெற்று வந்த நிலையில் 18வது மக்களவைக்கு தேர்தல் மூலம் சபாநாயகர் தேர்வு செய்யப்படவுள்ளார்.

துணை சபாநாயகர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கும்பட்சத்தில் சபாநாயகரை ஒருமனதாக தேர்வு செய்ய காங்கிரஸ் விருப்பம் தெரிவித்தது.

இதற்கு பாஜக செவிசாய்க்காததை அடுத்து தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

பாஜக சார்பில் ஓம் பிர்லா சபாநாயகர் தேர்தலில் போட்டியிட உள்ளார், இவர் ஏற்கனவே 17வது மக்களவையின் சபாநாயகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் கேரளாவைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் அனைவரும் நாளை காலை 11 மணிக்கு அவை துவங்கும் நேரம் முதல் அவை நிறைவடையும் நேரம் வரை அவையில் இருக்க கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாஜக-வுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்ற போதும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைத்துள்ளது.

தவிர, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் பாஜக-வுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.

இந்த நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்காமல் கொடிக்குன்னில் சுரேஷை சபாநாயகர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக அறிவித்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதனையடுத்து நாளை நடைபெற இருக்கும் சபாநாயகர் தேர்தல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.