ஆந்திர மாநில துணை முதல்வராக பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சிக்கு 135 இடங்களும் அதனுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சி போட்டியிட்ட 21 இடங்களிலும் வெற்றிபெற்றது.

175 உறுப்பினர்கள் கொண்ட ஆந்திர சட்டசபைக்கு பாஜக கட்சியைச் சேர்ந்த 8 பேர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 11 இடங்களை மட்டுமே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் பெற்றுள்ளது.

இதனையடுத்து 12ம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு தன்னுடன் அமைச்சர்களாக பதவியேற்ற 24 பேருக்கும் இலாக்கா விவரங்களை இன்று வெளியிட்டார்.

அதில், பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு மற்றும் பொது நிர்வாகம் ஆகிய துறைகளை தனது வசம் வைத்துள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு

துணை முதல்வர் பவன் கல்யாணிடம் சுற்றுச்சூழல், காடுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி, குடிநீர் விநியோகம் ஆகிய துறைகளை ஒப்படைத்துள்ளார்.

அதேபோல் தனது மகன் நாரா லோகேஷுக்கு மனித வளம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, RTG (ரியல் டைம் கவர்னன்ஸ்) ஆகிய துறைகளை வழங்கியிருக்கிறார்.