டெல்லி

ரண தண்டனை வழங்கப்பட்டுள்ள பாகிஸ்தான் பயங்கரவாதியின் கருணை மனுவை இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்துள்ளார்.

டெல்லி செங்கோட்டை வளாகத்திற்குள் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந்தேதி ஊடுருவிய பயங்கரவாதிகள், அங்கிருந்த பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஆரீப் என்ற அஷ்பாக்கை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அஷ்பாக்கிற்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. அஷ்பாக் உள்ளிட்ட 4 பயங்கரவாதிகள் கடந்த 1999-ம் ஆண்டு சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்து, ஶ்ரீநகரில் தங்கியிருந்து செங்கோட்டை தாக்குதல் தொடர்பான திட்டங்களை தீட்டியதாக நிதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மற்ற 3 பயங்கரவாதிகள் அபு ஷாத், அபு பிலால் மற்றும் அபு ஹைதர் ஆகியோர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அஷ்பாக், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஆரிப் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து, அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது.

தற்சமயம் தனது மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி அஷ்பாக் தாக்கல் செய்த கருணை மனுவை ஜனாதிபதி திரவுபதி முர்மு நிராகரித்துள்ளதன் மூலம் 24 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த செங்கோட்டை தாக்குதல் வழக்கில் குற்றவாளி அஷ்பாக்கிற்கு மரண தண்டனை உறுதியாகியுள்ளது. ஆயினும் அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ், நீண்ட கால தாமதத்தின் அடிப்படையில் தனது தண்டனையை குறைக்கக் கோரி மரண தண்டனை கைதி சுப்ரீம் கோர்ட்டை நாடலாம் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.