அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு  இன்று 4வது முறையாக பதவியேற்றார். விழாவில் பிரதமர் மோடி அவரை கட்டித்தழுவி வாழ்த்தினார். மேலும் , மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நடிகர் ரஜினி உள்பட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.


ஆந்திரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று, தேர்தலில் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் விஜயவாடாவில்  நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கட்சிகளைச் சேர்ந்த 162 எம்எல்ஏ.க்கள் பங்கேற்றனர். இதில் ஆந்திர மாநில சட்டப்பேரவை தெலுங்கு தேசம் கூட்டணி கட்சிகளின் தலைவராக சந்திரபாபுநாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் ஆட்சி அமைக்க கவர்னரை சந்தித்து உரிமை கோரினார். அதை ஏற்று கவர்னர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து இன்று (ஜூன் 12ந்தேதி) காலை  மாநில முதலமைச்சராக 4வது முறை தெலுங்குதேசம் கட்சி தலைவர் பதவி ஏற்றார். அவருக்கு  கவர்னர் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில், ஆந்திர முதல்வராக இன்று (ஜூன் 12) சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவருக்கு கவர்னர் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து,  ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், சந்திரபாபு மகன் நாரா லோகேஷ் உட்பட 24 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இந்த பதவி ஏற்பு  விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா, நிதின் கட்கரி, சிராக் பஸ்வான், ராம்தாஸ் அத்வாலே, மஹாராஷ்டிரா மாநில முதல்வர் எக்நாத் ஷிண்டே, நடிகர் ரஜினி, அவரது மனைவி லதா, நடிகர்கள் சீரஞ்சீவி, பால கிருஷ்ணன், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், புதுச்சேரி மாநில முன்னாள் கவர்னர் தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முதல்வராக பொறுப்பேற்ற சந்திரபாபு நாயுடுவை, பிரதமர் மோடி ஆரத்தழுவி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

முன்னதாக, பதவி ஏற்பு விழாவுக்கு,  விஜயவாடா விமான நிலையம் அருகே கேசரபல்லி எனும் இடத்தில் சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் பதவி ஏற்பு விழா வெகு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாகனங்கள் நிறுத்த சுமார் 60 ஏக்கர் நிலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பந்தலில் பதவி ஏற்பு விழா விமரிசையாக நடைபெற்றது.

இந்த  பதவிஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடி வருகை புரிந்திருந்தார். மேலும், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜேபி. நட்டா, நிதின் கட்கரி, ராம்மோகன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராம்சரண் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கைய்ய நாயுடு, தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக முன்னாள் முதல்வர் ஒ. பன்னீர் செல்வம், ராம்கோ குரூப், ஈஸ்வரி க்ரூப் நிறுவனத்தார், ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 நடந்து முடிந்த ஆந்திர மாநில தேர்தலில் நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் முக்கிய பங்கு வகித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இவரது கட்சிக்கு வழங்கப்பட்ட 21 பேரவை, மற்றும் 2 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது. சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக முக்கிய பங்கு வகித்த பவன் கல்யாணுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் ஜனசேனா கட்சியில் இருந்து 3 பேரும், பாஜகவில் இருந்து ஒருவரும் இடம்பெற்றுள்ளனர். சந்திரபாபு நாயுடு தவிர்த்த 24 அமைச்சர்களில் 3 பேர் பெண்கள். புதிய முகங்கள் 17 பேருக்கு சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Videos and Photos:  Thanks ANI