இன்று தமிழகம் முழுவதும் டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித்தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன.  அதன்படி கிராம நிர்வாக அலுவலர்,  வனக் காப்பாளர், இளநிலை உதவியாளர்,  தட்டச்சர் உட்பட குரூப் 4 பதவிகளில் வரும் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரியில் வெளியிட்டது.

கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி தொடங்கிய இணையதள விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 28-ம் தேதி வரை நடைபெற்றது.  இதில் தமிழ் தகுதித் தாள் 100,  பொது அறிவுத் தாள் 100 என மொத்தம் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.   தமிழ் தகுதித்தாள் தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பாடம் சார்ந்த மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இன்று தமிழகம் முழுவதும் பல தேர்வு மையங்களில் குரூப் 4 எழுத்து தேர்வு நடைபெறுகிறது.  இன்று காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெறவுள்ளது.  தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே தேர்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  9 மணிக்கு பின்னர் வரும் தேர்வர்கள் தேர்வு வளாகத்திற்குள்ளேயும், 12.45 மணிக்கு முன்னர் தேர்வு அறையிலிருந்து வெளியேற செல்லவும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.