டெல்லி: தமிழ்நாடு முன்னாள் முதல்வ ர்மறைந்த கருணாநிதி 101வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லியில் திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்துக்கு காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல்காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டினார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு மற்றும் 101வது பிறந்தநாள் இன்று திமுகவினரால் மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னை கடற்கரைச் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில், மலா்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், அண்ணா சாலை ஓமந்தூராா் வளாகம், கோடம்பாக்கம் முரசொலி வளாகம், அண்ணா அறிவாலயம் ஆகியவற்றில் அமைந்துள்ள கருணாநிதி சிலைகளுக்கு மு.க.ஸ்டாலின் மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், மாநிலம் முழுவதும் திமுகவினர் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செய்தும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள திமுகவின் அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள கருணாநிதி உருவப்படத்துக்கு காங்கிரஸ் எம்.பி.யும் இளந்தலைவருமான ராகுல்காந்தி, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தின் தலைசிறந்த தலைவர் – தமிழ் மக்களின் கலாசாரம், மொழி ஆகியவற்றைக் காத்தவர். இன்று இங்கு வருவது எனக்குக் கிடைத்த பெருமை” என்று கூறியுள்ளார்.