சென்னை: தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விவசாயிகளின் கடும் விமர்சனத்தைத் தொடர்ந்து, சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை நிறுத்த வலியுறுத்தி கேரள அரசுக்கு தமிழ்நாடு அரவிக் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
“சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வருகிறது. இந்த தடுப்பணை கட்ட கேரள அரசு முதல் கட்டமாக 2.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சிலந்தி ஆற்றின் குறுக்கே 10 அடி உயரம், 120 அடி நீளத்தில் இந்த தடுப்பணை அமைக்கும் பணி வெகு வேகமாக நடந்து வருகிறது. இப்பணி முடிவுற்றால், கரூர், திருப்பூர் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பாசனம் மற்றும் குடிநீர் பெறுவதற்கு சாத்தியமாகாது . தமிழக மாவட்டங்களில் ஓடிவரும் அமராவதி ஆறு நீர்வழி பயன்பாடு தடைபடும்.
இதனால், இந்த தடுப்பணை கட்டுவதை தமிழ்நாடு தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியை உடனே தடுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு கண்டுகொள்ளாத நிலையில், இந்த தடுப்ணை விவகாரத்தை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, அணை கட்ட தடை விதித்ததுடன், இதுதொடர்பாக தமிழ்நாடு, கேரள மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டு உள்ளது.
சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், காவிரி படுகையில் அமராவதி (பம்பாறு) துணை படுகையின் ஒரு பகுதியான சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதாக சமீபத்தில் சில ஊடகங்களில் செய்திகள் வந்தன. இதன் காரணமாக, அமராவதி ஆற்றில் நீர்வரத்து வெகுவாக குறையும் என தமிழக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த தடுப்பணை தொடர்பான திட்ட விவரங்கள் எதுவும் தமிழக அரசிடமோ, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடமோ வழங்கப்படவில்லை. எனவே, கேரள நீர்வளத் துறை அதிகாரிகளிடம் தமிழக நீர்வளத் துறை செயலர் கேட்டபடி, இத்திட்டம் குறித்த தற்போதைய நிலவரம் மற்றும் கேரளாவின் பவானி மற்றும் அமராவதி (பம்பாறு) துணை படுகைகளுக்கான பெருந்திட்டம் (Master Plan) ஆகிய முழு விவரங்களை அளிக்க வேண்டும். இப்பிரச்சினை குறித்து சட்டப்படி ஆய்வு செய்ய மிகவும் தேவைப் படுவதால், இந்த விவரங்களை தமிழகத்துக்கு உடனடியாக அளிக்க வேண்டும்.
தமிழகம் – கேரளா ஆகிய இரு மாநிலங்கள் இடையிலான உண்மையான தோழமை உணர்வை நிலைநிறுத்தும் வகையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை, சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டும் பணியை நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்ட அனுமதி இருக்கா? கேரளாவுக்கு கேள்வி எழுப்பியது பசுமை தீர்ப்பாயம்…