கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்ட யூடியூபர் இர்பானுக்கு தமிழக சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அவர் வெளியிட்ட வீடியோவை அகற்ற யூடியூப் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியுள்ளது.
கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை அறிவதற்கும் அறிவிப்பதற்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ‘இர்பான் வியூஸ்’ என்ற யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ஃபுட் ரிவ்யூவர் இர்பான் தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய துபாய்க்கு சென்று பரிசோதனை செய்தார்.
அவருக்கு பெண் குழந்தை பிறக்க இருப்பதாக அந்நாட்டு மருத்துவர்கள் அறிவித்த நிலையில் அதனை இந்தியாவில் உள்ள தனது பின்தொடர்பாளர்களுக்காக தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு அறிவித்தார்.
இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் சர்ச்சையானதை அடுத்து தமிழக சுகாதாரத் துறை இர்பான் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியாவில் சிசுவின் பாலினம் அறிவதும் அறிவிப்பதும் பாலின 1994 (PCPNDT ACT 1994) (Central Act 57 of 1994) ன் படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் எந்த அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் என்று இர்பானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், இதுதொடர்பான வீடியோவை யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து அகற்றுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தவிர, கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது அரசு கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் எச்சரித்துள்ளது.