ஹவுரா டவுன்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளது.

நேற்று மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஆரம்பாக், உலுபெரியா, ஹூக்ளி, ஹவுரா, போங்கான், ஸ்ரீராம்பூர் மற்றும் பாரக்பூர் ஆகிய 7 மக்களவை தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த 5 தொகுதிகளில் கடந்த 2019 தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், 2 தொகுதிகளில் பா.ஜனதாவும் வெற்றி பெற்றிருந்தன.

நேற்று மம்தா பானர்ஜியின் இளைய சகோதரர் பாபுன் பானர்ஜி, ஹவுரா டவுன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்துவதற்காக சென்றபோது வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் விடுபட்டிருப்பதாக வாக்குச்சாவடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே பாபுன் பானர்ஜி தனது வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார். ஏற்கனவே ஹவுரா மக்களவை தொகுதியில் பாபுன் பானர்ஜி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அந்த தொகுதியில் ஏற்கனவே எம்.பி.யாக பதவி வகித்து வரும் பிரசுன் பானர்ஜிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக பாபுன் பானர்ஜி கூறியதைத் தொடர்ந்து தனது சகோதரர் பாபுன் பானர்ஜியுடன் இனி தனக்கு எந்த உறவுமுறையும் கிடையாது என மம்தா பானர்ஜி அறிவித்தார்.

பாபுன் பானர்ஜி பாஜகவில் இணைய உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது.  தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பாஜகவினர் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன  இந்நிலையில் பாபுன் பானர்ஜியின் பெயர் விடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.