போர்ஷே காரை அதிவேகமாக ஒட்டிச் சென்று 2 பேரை கார் ஏற்றி கொன்ற வழக்கில் 17 வயது வாலிபருக்கு 15 மணி நேரத்தில் ஜாமீன் கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் சனிக்கிழமை அன்று இரவு நடைபெற்ற இந்த விபத்தில் 200 கி.மீ. வேகத்தில் வந்த கார் மோதியதில் பைக்கில் சென்றுகொண்டிருந்த 2 பேர் மரணமடைந்தனர்.
12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதை நண்பர்களுடன் கொண்டாடிய 17 வயது வாலிபர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டிவந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது பைக்கில் சென்று கொண்டிருந்த 2 பேர் மீது மோதியதில் அந்த பைக்கில் பயணம் செய்த பெண் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்டார் பைக்கை ஓட்டிவந்த ஆண் அங்கு நின்றுகொண்டிருந்த கார் மீது தூக்கி வீசப்பட்டார்.
இதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். பைக்கில் மோதிவிட்டு காருடன் தப்ப முயன்ற நிலையில் காரில் ஏர் பேக் திறந்துகொண்டதை அடுத்து அது டிரைவரின் கண்ணை மறைக்க அதற்குள்ளாக அந்த காரை அங்கிருந்தவர்கள் மடக்கிப்பிடித்தனர்.
அந்த காரில் டிரைவருடன் மேலும் 2 பேர் பயணம் செய்த நிலையில் ஒருவர் தப்பியோடி விட்டார். பிடிபட்ட இருவரையும் அங்கிருந்தவர்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் பிடித்துக் கொடுத்தனர்.
போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் அந்த காரை ஓட்டிவந்த 17 வயது வாலிபருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் 15 நாள் போக்குவரத்து காவல்துறையினருடன் சேர்ந்து போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், காரை ஓட்டிவந்தவரின் தந்தை மீதும் அந்த வாலிபர்களுக்கு மது விற்ற பார் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளது.