சென்னை: தமிழ்நாடில் இந்த ஆண்டு கோடை மழை கொட்டி வரும் நிலையில், மேலும் சில மாவட்டங்களில் கனமழை உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
இதையடுத்து, பொதுமக்கள், சில பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க, குறிப்பாக ஆறு, மலை, காடுகள், ஏரிகள், கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும், கன மழை காரணமாக ஆறு, நீர்வீழ்ச்சி மற்றும் கடலில் குளிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை எச்சரித்துள்ளது.
நடப்பாண்டு கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு மாவட்டங்களில், வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்பட்ட நிலையில், கடந்த ஒரு வார காலமாமக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. அக்னி நட்சத்திரம் வெயிலைத்தாண்டி, சென்னை உள்பட பல மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. வரும் 22ந்தேதி வரை மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் 19.05.2024 நாளிட்ட அறிவிக்கையில் 23.05.2024 முடிய பல்வேறு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில தமிழ்நாடு மாநில பேரிடர் துறை சார்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மார்ச் மாதம் முதல் மே மாதம் முடிய உள்ள கோடைக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு 12.5 செ.மீ. மழை இயல்பாக கிடைக்கப் பெறுகிறது. இவ்வாண்டு 1.3.2024 முதல் 19.5.2024 முடிய 8.44 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
திகனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், பேரிடர் சூழலை திறம்பட கையாள்வதற்கு வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறையினை பின்பற்றி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு 15.5.2024 அன்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள 2.66 கோடி செல் பேசிகளுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) மூலம் 18.05.2024 மற்றும் 19.05.2024 ஆகிய நாட்களில் எச்சரிக்கை குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளது.
கன மழை எச்சரிக்கையினைத் தொடர்ந்து, தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 296 வீரர்கள் அடங்கிய 10 குழுக்கள், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு 23.05.2024 முடிய கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் போதிய பாதுகாப்புடன் வரவேண்டும் என்றும், சுற்றுலா வருவதை தவிர்க்க எண்ணினால் தவிர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.