விசாகப்பட்டினம் மற்றும் தெலுங்கானா இளைஞர்கள் வேலை வாய்ப்பு என்ற பெயரில் கம்போடியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, இருட்டு அறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு, சைபர் குற்றங்களைச் செய்ய கட்டாயப்படுத்திய கும்பலை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ஆந்திர மாநில கூடுதல் டி.ஜி.பி. டாக்டர் ஏ. ரவிசங்கர் ஐபிஎஸ் கூறுகையில், வேலையில்லாத இளைஞர்களை ஏமாற்றி கம்போடியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து (பாங்காக்) உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிக வருமானத்துடன் கூடிய டேட்டா என்ட்ரி மற்றும் கம்ப்யூட்டர் சிஸ்டம் ஆபரேட்டர் உள்ளிட்ட வேலைகள் வாங்கித் தருவதாக ஆந்திர மாநிலம் கஜுவாகா பகுதியில் இருந்து செயல்படும் முகவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.

விமான டிக்கெட் மற்றும் இதர போக்குவரத்து செலவுகளுக்காக இவர்களிடம் இருந்து தலா ₹90,000 பணத்தை பெற்றுக்கொண்டு கம்போடியா, மியான்மர் மற்றும் பாங்காக் உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பிய இந்த முகவர்கள் அவர்களை 2,500 டாலர் முதல் 4,000 டாலருக்கு அங்குள்ள சீன நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர்.

இந்த சீன நிறுவனங்கள் இவர்களை சைபர் கிரைம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட கட்டாயப்படுத்தியதாகவும் இதற்கு இணங்க மறுத்தவர்களை இருட்டு அறைகளில் பூட்டி வைத்து உணவு மற்றும் அடிப்படை வசதி கூட செய்து தராமல் சித்திரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

சீன நிறுவனத்தின் சித்திரவதையில் இருந்து தப்பிய போட்சா சங்கர் என்பவர் விசாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் கஜுவாக்காவைச் சேர்ந்த சுக்கா ராஜேஷ் (33) மற்றும் அவரது துணை முகவர்கள் சப்பவரபு கொண்டலராவ் (37), மண்ணெனா ஞானேஸ்வர ராவ் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது, சைபர் கிரைம் மூலம் ஏமாற்றப்பட்ட தொகையை மோசடி நிறுவனங்களுக்கு மாற்றுவது மற்றும் டாஸ்க் கேம்கள் மற்றும் கிரிப்டோகரன்சி போன்ற மோசடிகளில் முதலீடு செய்ய மக்களை தூண்டுவது உள்ளிட்ட சைபர் குற்றங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளில் இவர்கள் ஈடுபட்டது தெரியவந்தது.

பொறியியல் பட்டம் பெற்ற சுக்கா ராஜேஷ் ஆரம்பத்தில் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வந்ததாகவும் 2021க்குப் பிறகு வளைகுடா நாடுகளுக்குச் செல்வதை குறைத்துக் கொண்டு அங்குள்ள நிறுவனங்களுக்கு ஆள் சேர்த்து விடும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

நாளடைவில் கம்போடியாவில் இருந்து செயல்பட்டு வரும் சந்தோஷ் என்பவரின் அறிமுகம் கிடைத்ததை அடுத்து கம்போடியா, மியான்மர் மற்றும் பாங்காக் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வந்ததாகவும் இதற்காக பெறப்பட்ட ரூ. 90000 பணத்தில் தனக்கு ரூ. 20000 கமிஷன் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், ராஜமுந்திரி, அனந்தபூர், பலாசா, துனி, அனகாபள்ளி, தெலுங்கானா மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150 பேரை இதுவரை இந்த நாடுகளுக்கு சுக்கா ராஜேஷ் அனுப்பியுள்ள நிலையில் இவர்களை சீன நிறுவனங்களுக்கு சந்தோஷ் விற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து சந்தோஷ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வருகிறார்.

வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி சீன நிறுவனங்களில் சைபர் கிரைம் குற்றச்செயலில் ஈடுபடுத்தப்பட்ட விவகாரம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.