சென்னை: தமிழ்நாட்டில் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிப்பதிலும், இலக்கு நிர்ணயிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது கடுமையான விமர்சனங் களை ஏற்படுத்தி உள்ளது. இதை உடனே கைவிட வேண்டும் என ஓட்டுநர் தொழிற்சங்கம் வலியுறுத்தி உள்ளது.
நாடு முழுவதும் வாகன பெருக்கத்தாலும், போக்குவரத்து விதி மீறல்களாலும் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க மத்திய அரசு மோட்டார் வாகன சட்டம்-1988-ல், கடந்த 2019-ம் ஆண்டு திருத்தங்களை கொண்டு வந்தது. புதிய வாகனச்சட்டத்தின்படி இரண்டு சக்கர மோட்டார் சைக்கிள் வாகன ஓட்டிகள் தலைக் கவசம் (ஹெல்மெட்) அணியாவிட்டால் ரூ.1,000, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம், போக்குவரத்து சிக்னல்களை மீறினால் ரூ.500, பெர்மிட் இல்லாத வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம், 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.1,000, தகுதியற்ற நபர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி தரும் நபர்களுக்கு ரூ.5 ஆயிரம், பார்க்கிங் அனுமதி இல்லாத இடங்களில் வாகனம் நிறுத்தினால் ரூ.1,500 என்பன உள்பட 44 விதமான விதிமுறை மீறல்களுக்கு அபராதத்தொகை உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்த அபராத கட்டணம் உயர்வு சாமானிய மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த அபராதங்கள் வசூலிப்பதிலும், இலக்கு நிர்ணயித்து போக்குவரத்து போலீஸார் அப்பாவிகளிடம் ஈவு இரக்கமின்றி, விதிகளை மீறி அபராதம் வசூலிப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாட்டில் போதை பொருள் நடமாட்டம் தீவிரமாகி உள்ள நிலையில், காவல்துறையினர் மாமுல் பெற்றுக்கொண்டு ஆட்சியாளர்களின் ஆதரவாளர்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய உதவி வருவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்படும் நிலையில், காவல்துறையினர் ஆட்சியாளர்களுக்கு மாமுல் கொடுக்கவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதுபோல அவசர தேவைக்காக சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களை கைப்பற்றி எடுத்துச்செல்லும் காவல்துறையினர், அதை முறையாக திருப்பி கொடுப்பது இல்லை என்றும், அடாவடியாக வசூல் செய்வதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டும் நிலையில், தனியார் ஆட்களை வைத்து, மாந்தோறும் வசூல் வேட்டை நடத்துவதாகவும் ஆட்டோ சங்கத்தினர் கூறி வருகின்றனர்.
சென்னை உள்பட மாநிலம் முழுவதும் போக்குவரத்து காவல்துறையினரின் அடாவடி வசூல் நடவடிக்கை கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில், அனைத்து உரிமங்களுடன் பள்ளிக்கு புத்தங்களை ஏற்றிச்சென்ற வாகனத்தை மடக்கி போலீசார் அபராதம் வசூல் செய்த வீடியோ வைரலான நிலையில், போக்குவரத்து போலீசாரின் அடாவடி நடவடிக்கைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்து ஓட்டுநர் தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து உரிமை குரல் (ஓட்டுநர் தொழிற்சங்கம்) மாநில தலைவர் இ.சே.சுரேந்தர், பொதுச் செயலாளர் அ.ஜாகீர் உசேன் ஆகியோர் இணைந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அதில், சென்னை பெருநகர் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு ரக சரக்கு வாகனங்கள் இயங்கி வருகின்றன. அந்த வாகனங்கள் சாலைகளில் லோடு இல்லாமல் சென்றாலும் அல்லது அனுமதித்த அளவிலான லோடுகளை ஏற்றி சென்றாலும் கூட போக்குவரத்து காவல் துறையினர் தங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறி அபராதம் விதிக்கின்றனர்.
மேலும், கால் டாக்ஸி, டூரிஸ்ட்கேப், ஆட்டோ போன்ற வாகனங்களுக்கும், எப்போதோ எடுத்து வைத்த புகைப்படங்களை அப்லோடு செய்தும் பல்வேறு வகையிலான ஆன்லைன் அபராதங்களையும் கண்மூடித்தனமாக போக்குவரத்து காவல் துறையினர் விதிக்கின்றனர்.
இதனால், ஓட்டுநர்களுக்கு பெரும் மன உளைச்சல் ஏற் படுவதுடன் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, போக்கு வரத்து காவல் துறையினருக்கு இலக்கு நிர்ணயித்து அபராதம் வசூலிப்பதை கைவிட வேண்டும். மேலும், தவறான அபராதங்கள் விதிக்கப்பட்டிருந்தால் அவற்றை எளிய முறையில் நீக்குவதற்கான வழிமுறைகளையும் செயல்படுத்த வேண்டும்.
கடந்த 6-ம் தேதி சென்னை கொளத்தூரில் பள்ளிக்கு நோட்டு புத்தகங்களை ஏற்றி சென்ற ஓட்டுநருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்.
மேலும், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.