விழுப்புரம்: தமிழ்நாட்டில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு காமிராக்கள் அடுத்தடுத்து செயலிழந்து வரும் நிலையில், விழுப்புரம் தொகுதியில் வைக்கப்பட்டுள்ள ங ஸ்டாங் ரூமில் 2-வது முறையாக சிசிடிவி காமிராக்கள் செயலிழந்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து, வாக்குப்பெட்டிகள் அனைத்தும், முக்கிய கல்லூரிகளில் உள்ள ஸ்டிராங் ரூம் எனப்படும் பாதுகாப்பாக, கண்காணிப்பு காமிராக்களுக்கும் வைக்கப்பட்டு, காவல்துறையினரின் 3 அடுக்கு பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எ இந்த அறையை, துணை ராணுவத்தினர், போலீஸார் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் என சுமார் 250-க்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். கட்சி முகவர்கள் கண்காணிப்பு அறை முன்பு ஒருங்கிணைக்கப்பட்ட சிசிடிவி கேமரா அறையில் 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு செல்லும் கட்சியினர் மாலை 4 மணி வரையிலும், மாலை 4 மணிக்கு செல்பவர்கள் இரவு 10 மணி வரையிலும், இரவு 10 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் மறுநாள் காலை 8 மணி வரையிலும் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில், ஸ்டிராங் ரூமில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள் அடிக்கடி பழுதாகும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. ஏற்கனவே கோவை, திருப்பூர், விழுப்புரம், தென்காசி என பல பகுதிகளில் காமிராக்கள் செயலிழந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது 2வது முறையாக விழுப்புரம் பகுதியில் உள்ள அண்ணா கல்லூரி ஸ்ட்ராங் ரூமின் காமிராக்கள் செயலிழந்துள்ளது.
விழுப்புரம் பாராளுமன்ற தனி தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் சேகரிக்கப்பட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரில் வைக்கப்பட்டுள்ளது. தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தவிர அந்த வளாகம் முழுவதும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இம்மையத்திற்கு விழுப்புரம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பழனி தினமும் சென்று கண்காணித்து, கையொப்பமிட்டு வருகிறார். இது தவிர அ.தி.மு.க., பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கிய கட்சி பிரமுகர்கள், இந்த ஸ்டாங் ரூமை தினமும் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் இயங்கி வந்த சி.சி.டி.வி. கேமராக்கள் இன்று காலை 7.30 மணிக்கு பழுதானது. இதனால் அங்கு அமைக்கப்பட்ட டி.வி.க்களில் சி.சி.டி.வி. கேமரா பதிவு ஒளிபரப்பாகவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்கள் போராடி, சி.சி.டி.வி. கேமராக்களை சரி செய்தனர்.
விழுப்புரத்தில் இடி மின்னலுடன் பெய்த திடீர் மழையால், சி.சி.டி.வி. கேமராவில் பழுது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இத்தகவல் அறிந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் ஸ்டாங் ரூம் வளாகத்திற்குள் குவிந்தனர். இதனால் இப்பகுதியில் திடீர் பரபரப்பு நிலவியது.