சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுகும் வெப்பம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளாதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பொது மக்களை கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெப்ப அலை வீசுவதால், பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறார்கள். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும், 109 டிகிரி வரை வெப்பம் சுட்டெரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

”தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது. வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில், ஒரு சில இடங்களில் மே 1 ஆம் தேதி  வரை அதிகபட்ச வெப்பநிலை 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக காணப்படும்.

மே 2 மற்றும் 3 ஆம் தேதிகளில், தமிழக வட உள் மாவட்டங்களில், சமவெளி பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும். அடுத்த 5 நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில், 39 டிகிரி முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை (102.2 முதல் 109.4 டிகிரி வரை) பதிவாகும். மேலும் வெப்ப அலையும் வீசும்.

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனல் மே 1 ஆம் தேதி வரை, கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பிற தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

மே 2 ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மே 3 ஆம் தேதி முதல் மே 5 ஆம் தேதி வரையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதை ஒட்டிய வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.”

என்று கூறப்பட்டுள்ளது.