அருள்மிகு ஆதிநாதன்  திருக்கோயில்,  ஆழ்வார் திருநகரி ,  தூத்துக்குடி மாவட்டம்.

?????????????

காரியார் என்னும் குறுநில மன்னருக்கும், உடையநங்கைக்கும் திருமகனாக தோன்றினார் சடகோபர். இவர் பிறந்ததிலிருந்தே கண்மூடிய நிலையிலும், அழாமலும், சாப்பிடாமலும் இருந்ததைப் பார்த்த பெற்றோர் மிகவும் கவலையடைந்தனர். சடகோபரைக் கோயிலுக்கு அழைத்து வந்தனர். சடகோபர் ஓடிச்சென்று அங்கு இருந்த புளியமரத்தடியில் இருந்த பொந்தில் அமர்ந்து கொண்டார். அதன்பிறகு அவரை அசைக்க முடியவில்லை. 16 ஆண்டுகள் உணவில்லாமல் இருந்தார். ஆனால், உடல் வளர்ச்சி குன்றவில்லை. அப்போது வடநாட்டு யாத்திரைக்கு சென்றிருந்தார் மதுரகவியாழ்வார். செவிக்கு இனிமையான செஞ்சொற்களால் பாடுவதில் வல்லவர் என்பதால் மதுரகவிஆழ்வார் என புகழப்பட்டார். அயோத்தியில் இருந்தபடியே தென் திசை நோக்கி வணங்கும் போது அத்திசையில் ஒரு பேரொளியை கண்டார். அந்த ஒளியை நோக்கி நடந்து வந்தார் மதுரகவியாழ்வார். அந்த ஒளி புளியமரத்தடிக்கு வந்ததும் மறைந்து விட்டது. அந்த மரத்தில் ஒரு மகா ஞானி இருப்பதைக் கண்டார் மதுரகவியாழ்வார்.

ஞான முத்திரையுடன் மோன நிலையில் இருந்த சடகோபரை எழுப்ப நினைத்து, அவர் அருகில் ஒரு கல்லை போட்டார். சடகோபர் கண்விழித்தார். “செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தை தின்று எங்கே கிடக்கும்” (உயிரில்லாததான உடம்பில் ஆத்மா வந்து புகுந்து, எதனை அனுபவித்து எங்கே இருக்கும்?) என சடகோபரிடம் மதுரகவி ஆழ்வார் கேட்டார். அது வரை பேசாமலிருந்த சடகோபர் “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்றார். 

இந்நிகழ்ச்சியிலிருந்து சடகோபரை நம்மாழ்வார் என்ற பெயரில் மதுரகவி ஆழ்வார் அழைத்தார். நம்மாழ்வாரை மதுரகவி ஆழ்வார் தன் குருவாக ஏற்றுக்கொண்டார். இதனாலேயே இத்தலம் நவதிருப்பதியில் குரு ஸ்தலமாக விளங்குகிறது. இங்கு பெருமாளை விட நம்மாழ்வாருக்கு தான் சிறப்பு. நம்மாழ்வார் தங்கியிருந்த புளியமரம் இங்கு மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இம்மரம் ஏழு கிளைகளோடு உள்ளது. இரவில் உறங்காத காரணத்தினால் இம்மரம் “உறங்காப்புளி” என்றழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் தனது 35ம் வயதில் மாசி மாதத்தில் பூத உடல் நீத்தார். இம்மரத்தின் அடியில்தான் நம்மாழ்வாரின் பூத உடல் புதைக்கப்பட்டு, கோயில் கட்டப்பட்டது. மதுரகவி ஆழ்வார் தனது குருவான நம்மாழ்வாரின் பெருமைகளையும், பிரபந்தங்களையும் உலகெங்கும் பரப்பிப் பெருமையடைந்தார். 

இங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மூலவரின் பாதங்கள் பூமிக்குள் இருப்பதாக ஐதீகம். ஸ்ரீரங்கத்தைப் போலவே அரையர் சேவை நடக்கிறது. இங்கு திருமஞ்சனத்தின் போது பிரபந்தங்களை தாளம் போட்டுக்கொண்டே சொல்லும் பழக்கம் உள்ளது. ஐயாயிரம் வருடம் பழமையான நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரம் இன்றும் காட்சியளிக்கிறது. கடும் தவம் புரிந்த முனிவர்களுக்கு பெருமாள் பூமி தேவியுடன் வராக அவதாரத்தில் அருள்பாலிக்கிறார். இத்திருக்கோயில் மணவாள மாமுனிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்திரன் தாய், தந்தையரை மதிக்காமால் சாபம் பெற்று இங்கு வந்துதான் சாபவிமோசனம் அடைகிறான். இலட்சுமணன் இங்கு புளியமரமாக இருப்பதாகவும், பெருமாள் பிரம்மச்சரிய யோகத்தில் இருப்பதாகவும் ஐதீகம். இருந்தும் இலட்சுமி பெருமாளை அடைய இங்கு தவமிருந்ததால், பிரம்மச்சாரியாக இருந்த பெருமாள் இலட்சுமியை மகிழ மாலையாகத் தன் கழுத்தில் அணிந்துகொண்டதாகப் புராணம். இத்தல பெருமாளை பிரம்மா, சங்கன் முனி, மதுரகவியாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் வழிபட்டுள்ளனர். தாந்தன் என்ற தாழ்த்தப்பட்ட சமுதாய பக்தனுக்கு மோட்சம் தந்ததால் இத்தலத்திற்கு “தாந்த சேத்திரம்” என்றும் பெயர். பாண்டி நாட்டு நவதிருப்பதிகளுள் இத்தலம் குருவுக்குரிய தலமாக அமைந்துள்ளது. வைணவர்கள் ஸ்ரீரங்கத்தை பரமபதத்தின் வாசல் எனவும், ஆழ்வார் திருநகரியை பரமபதத்தின் எல்லை எனவும் கூறுவார்கள். மூலவரின் சன்னதிக்கு எதிர்புறமுள்ள கருட மண்டபத்தை மணவாள மாமுனிகள் நிறுவினார். பெருமாளின் வி மானத்தை விட நம்மாழ்வாரின் விமானம் சற்று பெரியது. மரத்தால் செய்யப்பட்டதைப்போலவே கல்லால் ஆன நாதஸ்வரம் ஒரு அடிநீளத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. நவதிருப்பதியில் இது 5 வது திருப்பதி. இத்தலம் நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். இதனால் இத்தலம் ஆழ்வார் திருநகரி என்றழைக்கப்பட்டது. பொதுவாக ஆழ்வார்கள் பெருமாளையே மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால், மதுரகவியாழ்வார் இத்தலத்தில் தன் குருவான நம்மாழ்வாரை மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வாருக்கு ஆதிநாதப் பெருமாள் குருவாக அருள்பாலிக்கிறார். 

தாமிரபரணி ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் மூன்று பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது. பிரகாரத்தில் இராமர், வேணுகோபாலன், கருடன், திருப்புளியாழ்வார், நரசிம்மர், வராகப்பெருமாள், திருவேங்கடமுடையான், நாத முனிகள் ஆகியோருக்கு தனி சன்னதி உள்ளது. 

திருவிழா:

குரு பெயர்ச்சி.

பிரார்த்தனை:

நவக்கிரக தோஷங்கள் நீங்க இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

நேர்த்திக்கடன்:

பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவர்கள், தாங்கள் விரும்பிய பொருட்களை காணிக்கையாக செலுத்துகிறார்கள். 

வழிகாட்டி:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஆழ்வார் திருநகரி அமைந்துள்ளது. திருநெல்வேலி– திருச்செந்தூர் ரோட்டில் உள்ள இவ்வூருக்கு திருநெல்வேலி மற்றும் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து அடிக்கடி பஸ்வசதி உள்ளது..