சென்னை: தமிழ்நாட்டில் வெயில் அனல்காற்றுடன் கொளுத்தி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கோடை விடுமுறையை கொண்டாட குளுகுளு பிரதேசமான கொடைக்கானனுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றார். 5 நாள் பயணமாக இன்று காவைல கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றிபெறும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலம் முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். இதையடுத்து, அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு, மருத்துவர்கள் அவர் ஓய்வு எடுக்க அறிவுறுத்தினர்.
இதற்கிடையில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும், ஏப்ரல் மாதம் முதல் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியே தலைகாட்ட பயப்படுகின்றனர். மேலும் வெப்ப அலை இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்து உள்ளது. இதனால், பலர், கோடை வாசஸ்தலங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினும், கோடை விடுமுறை கழிக்க குடும்பத்துடன் வெளி இடங்களுக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் பரவி.ன இதைத்தொடர்ந்து, அவர் ஒருவாரம் ஓய்வுக்காக மாலத்தீவு செல்வதாக தகவல்கள் பரவின. இது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஓய்வுக்காக கொடைக்கானல் செல்ல இருப்பதாக திமுக தகவல் வெளியிட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் கொடைக்கானலுக்கு தனிப்பட்ட பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளனர். மே 4-ஆம் தேதி வரை கொடைக்கானலில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் குடும்பத்தினருடன் மதுரை புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்ல இருக்கிறார்.
கொடைக்கானல் செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அங்கே தனியார் ஹோட்டலில் குடும்பத்தினருடன் மே 4-ம் தேதி வரை 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க உள்ளார். முதலமைச்சர் வருகையையொட்டி கொடைக்கானலில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மே 4ஆம் தேதி அவர் சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.