சென்னை’
தமிழகத்தில் எஸ் எஸ் எல் சி விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்கப்படுகிறது.
இந்த ஆண்டு தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்துக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 22-ம் தேதி வரையும், 11 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மார்ச் 4-ல் தொடங்கி 25-ம் தேதி வரையும் நடைபெற்றன.
பிறகு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கிக் கடந்த 8-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இத்தேர்வைச் சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். விடைத்தாள்கள், மண்டல அளவிலான சேகரிப்பு மையங்களில் பாதுகாக்கப்பட்டன.
இன்று எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகின்றன. ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான வழிகாட்டுதல்களும் அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்கக அதிகாரிகள் இது குறித்து,
“எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, தமிழகம் முழுவதும் 88 மையங்களில் நடைபெறுகிறது. விடைத்தாள்கள் அடுத்த 8 வேலை நாட்களில் நிறைவு செய்ய ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணியில் கிட்டத்தட்ட 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகும்.
விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கவனத்துடன் செயல்பட வேண்டும். தமிழ் வழிமற்றும் ஆங்கில வழி விடைத்தாள்களை அதற்குரிய ஆசிரியர்கள் மட்டுமே திருத்த வேண்டும்’”
என்று தெரிவித்துள்ளனர்.