டெல்லி

த்தியப் பிரதேச மாநிலம் பிடல் தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாடெங்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல், ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.எனவே அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

வரும் 26 ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் பிடல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு, நடைபெற உள்ளது.

நேற்று அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் நேற்று மரணம் அடைந்து விட்டார். எனவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 52-ன்படி தேர்தல் ஒத்தி வைக்கப்படுகிறது எனத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.

தேர்தல் நடைபெறுவதற்கு முன் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அல்லது மாநிலக் கட்சியின் வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்து விட்டால், புதிய வேட்பாளர் ஒருவரை அடையாளம் கண்டு, நிறுத்துவதற்குக் கட்சிக்கு கால அவகாசம் கொடுக்கும் வகையில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவது வழக்கமாகும்.