ஆலப்புழை
கேரளாவைச் சேர்ந்த யூடியூபர் ஒருவர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர்ம் குறித்து தவறான தகவல் பதிந்த்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
கேரள மாநிலம் ஆலப்புழையைச் சேர்ந்த வெனிஸ் டி.வி. என்டர்டெயின்ட்மெண்ட் என்ற யூடியூப் சேனலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றி தவறான தகவல்கள் வெளியாயின. ஆலப்புழை தெற்கு காவல்துறையினர் அந்த யூடியூப் சேனல் உரிமையாளரான யூடியூபர் மீது வழக்கு தொடர்ந்து அவரை கைது செய்தனர்.
காவல்துறையினர் அவர் பெயர் விவரங்களை வெளியிடவில்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு சமூகத்தில் பதற்றத்தையும், பிளவையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்று அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்குப் பதிலாக வாக்குச்சீட்டுகள் முறையை மீண்டும் மக்களவைத் தேர்தலில் அமல்படுத்த வேண்டும் என்று அவர் சேனலில் கோரிக்கை விடுத்திருந்தார். அவர் இந்த வீடியோவை தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றியிருந்தார். எனவே அந்த யூடியூபர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.