டெல்லி: இன்று காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பெங்களூரு குடிதண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி, கர்நாடக மாநில அரசு, மேகதாது அணைக்கு ஒப்புதல் கோர முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு ஆட்சி செய்து வருகிறது. இவர்கள் ஆட்சிக்கு வந்ததும், மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறி, அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளது. மேலும், துணை முதல்வரான டி.கே.சிவகுமார், தான் நீர்வளத்துறை அமைச்சராக பதவியில் இருப்பதே, மேகதாது அணையை கட்டுவதற்காகத்தான், அதற்கான பணிகள் தொடங்கி விட்டன என பகிரங்கமாக கூறி வருகிறார். ஆனால், தமிழ்நாடு அரசு இதில் மெத்தனபோக்கையே கடைபிடித்து வருகிறது.
இந்த பரபரப்பான சூழலிலிதான, திடீரென பெங்களூருவில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு என்று தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கர்நாடக அரசியல் கட்சிகள் மாநில அரசுக்கு ஆதரவாகவும், தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணியை கர்நாடகா தீவிரப்படுத்தியுள்ளது.அம்மாநிலத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க ஒரே வழி என அம்மாநில அரசு மட்டுமின்றி அரசியல் கட்சிகளும் கூறி வருகின்றன. இதற்கிடையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் பணியை கர்நாடகா அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த விஷயத்தில், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, கேம் ஆடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுவரை தண்ணீர் பிரச்சினை ஏற்படாத பெங்களூருவில், திடீரென தற்போது தண்ணீர் தட்டுப்பாடு எப்படி எழுந்தது என்று கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், இதுகர்நாடக மாநில அரசின் சதி என கூறி வருகின்றனர். மேலும், தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி, மத்தியஅரசு, மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணை கட்ட அனுமதி பெற கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இநத் நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வைக்க கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் 21 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடந்தது. அதில் பெங்களூருவில் தாண்டவமாடும் குடிநீர் பற்றாக்குறையை போக்க காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகா மாநில அதிகாரிகள் வலியுறுத்தினார்கள். இதற்கு தமிழ்நாடு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை தமிழ்நாட்டுக்கு மாதத்துக்கு 2.8 டிஎம்சி வீதம் தண்ணீர் வழங்க வேண்டும் என கர்நாடகா அரசை ஒழுங்காற்று குழு கேட்டுகொண்டது.
இந்த நிலையில் டெல்லியில் இன்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு 4 மாநில அதிகாரிகளுக்கும், ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தார் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஆணைய செயல்பாட்டுக்கான நிதியும் கேட்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பெங்களூரு நகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாகவும், மேகதாது அணை கட்டுவது அவசியம் பற்றியும் கர்நாடகா அரசு எடுத்துரைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் தற்போது நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என உறுதியாக கர்நாடகா அரசு வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.