இஸ்லாம்பாத்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
சுமார் 71 வயதாகும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பணமோசடி, அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் அவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப்பொருட்களை விற்று ஊழல் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கில் இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி (59) ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஜனவரி 31-ந்தேதி முதல் அவர்கள் இருவரும் சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றமர். இந்த தண்டனையை எதிர்த்து இம்ரான்கான் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நேற்று இந்த வழக்கைத் தலைமை நீதிபதி அமீர் பரூக் தலைமையிலான அமர்வு விசாரித்தபோது இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது.
ஆயினும் அவர்கள் விடுதலை செய்யப்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஏனெனில் அவர்கள் இருவருமே மற்றொரு ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.