கொல்கத்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்

நேற்று இரவு டில்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பிறகு அவரை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அரவிந்த் கெஜ்ரிவாலை டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் முன்னிறுத்தினர்.

வழக்கு சிறப்பு நீதிபதி காவேரி பாவேஜா முன்பு விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவாலை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. .

டில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து மேற்கு வங்ள முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் தளத்தில்,

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். எனது அசைக்க முடியாத ஆதரவையும் ஒற்றுமையையும் தெரிவிக்கும் நோக்கில், சுனிதா கெஜ்ரிவாலிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன்.  

எதிர்க்கட்சி முதல்வர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரணையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்டனையின்றி தங்கள் முறைகேடுகளைத் தொடர அனுமதிக்கப்படுவது மூர்க்கத்தனமானது.  

அவர்கள் பா.ஜ.க.வில் இணைந்த பிறகு தண்டிக்கப்படுவதில்லை. அதோடு, முறைகேடுகளைத் தொடரவும் அவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இது ஜனநாயகத்தின் மீதான மூர்க்கத்தனமான, அப்பட்டமான தாக்குதல். 

நமது இந்தியா கூட்டணி இன்று தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து தனது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், வேண்டுமென்றே எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது குறித்து முறையிடும். தேர்தல் ஆணையத்துடனான இந்த முக்கிய சந்திப்பில் பங்கேற்க, திரிணாமூல் காங்கிரஸ் தரப்பில் டெரெக் ஓ பிரையன், முகம்மது நடிமுல் ஹாக் ஆகியோரை நியமித்துள்ளேன்” 

என்று பதிவிட்டுள்ளார்.