டில்லி

நேற்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டில்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டில்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியிருந்தது.  அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார்.

டில்லி உயர்நீதிமன்றத்தில் இது குறித்து நடைபெற்ற நிலையில், கெஜ்ரிவாலின் வழக்கைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.  அமலாக்கத்துறை கைதுக்குத் தடை விதிக்க கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை கைதுக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது. நேற்று 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர் கெஜ்ரிவாலின் வீட்டில் சோதனை நடத்தினர்.

பிறகு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை நேற்று இரவு கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.  இதை எதிர்த்து  கெஜ்ரிவால் வீட்டின் முன் ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்தனர். அங்குக் கலவரம் பரவாமல் இருக்க காவல்துறையினர் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர்.

கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய் ஆம் ஆத்மி முடிவு செய்து அதற்கான துரித நடவடிக்கையில் இறங்கியது. அமைச்சர் அதிஷி அமலாக்க அதிகாரிகளின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து, அதனை அதனை சட்டப்படி செல்லாதது என அறிவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இன்றிரவே அவசர வழக்காக இதனை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுள்ளளாதாகவ்ம் நேற்று கூறினார்.

நேற்றிரவு கெஜ்ரிவாலின் மனுவை விசாரிக்க என்று தனியாகச் சிறப்பு உச்சநீதிமன்ற அமர்வு எதுவும் நேற்றிரவு அமைக்கப்படவில்லை. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள், கெஜ்ரிவாலுக்கு தங்களுடைய ஆதரவை வழங்கினர். இந்த கைது நடவடிக்கைக்கு அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, ராகுல் காந்தி, சரத் பவார், பிரியங்கா காந்தி, மு.க. ஸ்டாலின், சசி தரூர் என கூட்டணியில் இடம் பெற்ற கட்சித் தலைவர்கள் பலரும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.