சென்னை: 1998ம் ஆண்டு நாட்டை உலுக்கிய கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தியதை கடுமையாக விமர்சனம் செய்துள்ள அமைச்சர் மனோ தங்கராஜ், “மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை தேர்தல் ஆயுதமாக மோடி கையில் எடுத்துள்ளார்” என கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சிறுபான்மையினர் நலன் என கூறி, பெரும்பான்மையான மக்களை வஞ்சித்து, சிறுபான்மையினருக்கு பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது. இது கடுமையான விமர்சனங்களை உருவாக்கி உள்ளது.
இந்த நிலையில், கோவையில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கு 1998ம் ஆண்டு, அல் உம்மா பயங்கரவாத அமைப்பினரால் நடத்தப்பட்ட நாசகார வெடிகுண்டு தாக்குதலில் 58பேர் உயிரிழந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 1998 கோயம்புத்தூர் குண்டுவெடிப்பை மறக்க முடியாது. இன்று நகரத்தில் இருக்கும் போது, அந்த குண்டுவெடிப்புகளில் நாம் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினோம் என குறிப்பிட்டிருந்தை.
இதை அமைச்சர் மனோதங்கராஜ் கடுமையாக விமர்சனம் செய்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வழக்கம் போல மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை தேர்தல் ஆயுதமாக மோடி கையில் எடுத்துள்ளார் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
தனது சமூகவலைதள பக்கத்தில், இதே போல, குஜராத் கலவரத்தில் இறந்தவர்கள், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள், ஒக்கி புயலில் இறந்தவர்கள், மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?
10 ஆண்டு பாஜக ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ஊழலும், 8 ஆயிரம் கோடி தேர்தல் பத்திர மோசடியையும் தவிர தாங்கள் சாதித்ததாக சொல்லிக்கொள்ள வேறெதுவும் இல்லை.
அதனால் வழக்கம் போல மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை தேர்தல் ஆயுதமாக மோடி கையில் எடுத்துள்ளார். இது இந்த தேர்தலில் எடுபடாது.#GoBackModi என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1998ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி கோவையில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த அத்வானியை கொலை செய்யும் முயற்சியாக அல்உம்மா பயங்கரவாத அமைப்பினர் 18 இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர், இதில் 58 அப்பாவி பொதுமக்கள் உயரிழந்தனர். மேலும், , 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சமயத்தில் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி. அதுபோல, கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவமும், திமுக ஆட்சியின்போதுதான் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.