லோக்சபா தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், குஜராத், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் உள்துறை செயலாளர்களை நீக்கி தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டது.
மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குனரை நீக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடைமுறையை உறுதி செய்வதற்கும், சமநிலையை பேணுவதற்கும் ஆணையத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மிசோரம் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் பொது நிர்வாக துறை செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட சில நாட்களில், தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ் குமார் தலைமையிலான தேர்தல் குழு, பிரஹன்மும்பை மாநகராட்சி கமிஷனர் இக்பால் சிங் சாஹல், கூடுதல் கமிஷனர்கள் மற்றும் துணை கமிஷனர்களை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டது.
தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் அல்லது சொந்த மாவட்டத்தில் பணியில் இருந்தால் அவர்களை இடமாற்றம் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார் மற்றும் சுக்பீர் சிங் சந்து ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.