சென்னை: இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, இன்று கோவையிலும், நாளை சேலத்திலும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அப்போது  பாஜகவுக்கு வாக்கு சேகரிக்கும் வகையில் ரோடு ஷோ நிகழ்ச்சியில், பாஜக பொதுக்கூட்டங்களிலும் பங்கேற்கிறார். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி  அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன. மேலும் பிரசாரங்கள் தொடங்கி உள்ளன. இந்த நிலையில், பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு திரட்டுவதற்காக இன்று தமிழ்நாடு வருகை தரும் பிரதமர் மோடி, இன்று கோவையிலும், நாளை சேலத்திலும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். இதையொட்டி, அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளி தயாராகி வருகின்றனர்.

பிரதமர் மோடி, இன்று (18-ம் தேதி) மாலை 5.30 மணியளவில்  கோவை வருகிறார். கோவை வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் தயாராக உள்ளனர். தொடர்ந்து, கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து மாலை 5.45-க்கு மணிக்கு வாகனப் பேரணி துவங்குகிறது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த பேரணி, ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே முடிவடைகிறது. இரவு கோவை சர்க்யூட் ஹவுஸ்-ல் தங்கும் பிரதமர் மோடி செவ்வாய்கிழமை காலை கேரளா செல்கிறார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி கோவை வருகையை முன்னிட்டு கோவை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், நாளை காலை 6 மணி முதல் நாளை மறுநாள் அதாவது 19 -ம் தேதி காலை 11 மணி வரை கனரக வாகனங்கள் கோவை நகருக்குள் வர அனுமதி இல்லை. இன்று  18-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 8 மணி வரை கோவை 100 அடி மேம்பாலம், சிவானந்தா காலனி, டிபி ரோடு, புரூக்பீல்ட் ரோடு, அவினாசி ரோடு மற்றும் பழைய மேம்பாலம் ஆகிய பகுதிகளின் வழியாக பொது மக்கள் மற்றும் வாகனங்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என கோவை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, நாளை சேலம் செல்கிறார். சேலத்தில் நாளை நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். சேலம் வரும் பிரதமர் மோடிக்கு சேலம், நாமக்கல் , கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை நந்தனம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி,  இன்று மாலை கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ (வாகன பேரணி) செல்கிறார். கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் இந்த வாகன பேரணி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே முடிவடைகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் இருந்து விமானம் மூலம் மாலை 5.30 மணிக்கு கோவை வருகிறார். பின்னர் சாய்பாபா காலனிக்கு சென்று வாகன அணி வகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி இரவு கோவையில் தங்குகிறார்.

பின்னர் நாளை (19-ந் தேதி) கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 11.40 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

அதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான பிரசாரக்கூட்டம் சேலத்தில் நாளை மதியம் 1.30 மணியளவில் நடக்கிறது. இதற்காக சேலம் அருகே உள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாலக்காட்டில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதியம் 1.30 மணியளவில் மேடை அமைக்கப்பட்டுள்ள சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி மைதானத்திற்கு வருகிறார். இதற்காக அங்கு 3 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

சேலம் வரும் பிரதமர் மோடிக்கு சேலம், நாமக்கல் , கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில் சிறப்புரையாற்றுகிறார். அப்போது மக்களையும் சந்திக்கிறார். இந்த கூட்டத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.

மோடியின் வருகையையொட்டி அவரை வரவேற்று அந்த பகுதியில் கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளதுடன் பிரமாண்ட பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. மோடி வருகையையொட்டி பா.ஜனதாவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். சேலத்தில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என்பதால் அவர்கள் வரும் வாகனங்கள் நிறுத்தவும், மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுக்கூட்ட மைதானத்திற்குள் செல்பவர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் நுழைவு வாயில் மூலம் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளத.

சேலம் பொதுக்கூட்டம் முடிந்ததும் இங்கிருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறா

ர். இதற்கான ஏற்பாடுகளை பொதுக்கூட்ட ஒருங்கிணைப்பாளரும், மாநில துணைதலைவருமான கே.பி.ராமலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். பிரதமர் மோடி வருகையையொட்டி சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி., அருண், டி.ஐ.ஜி.க்கள், 12 போலீஸ் சூப்பிரண்டுகள், 18 கூடுதல் சூப்பிரண்டுகள், 32 துணை சூப்பிரண்டுகள், 60 இன்ஸ்பெக்டர்கள், 208 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2 ஆயிரத்து 700 போலீசார் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

மேலும் பிரதமரின் தனி பாதுகாப்பு படையினரும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் மைதானம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் நேற்று மாலை முதல் மைதானம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநபர்கள் யாரும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. பிரதமர் சேலம் வருகையையொட்டி பாதுகாப்பு கருதி இன்றும், நாளையும் 2 நாட்கள் டிரோன்கள் மற்றும் ஆள் இல்லாத விமானங்கள் பறக்க தடை விதித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார்.

 

Parliament Election BJP PM Modi பாராளுமன்ற தேர்தல் பாஜக பிரதமர் மோடி