மும்பை
நேற்று இந்தியாவில் நடந்த 71 ஆவது உலக அழகிப்போட்டியில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1951 ஆம் ஆண்டு உலக அழகி போட்டி முதல்முறையாக இங்கிலாந்தில் 1951-ம் ஆண்டு நடத்தப்பட்டது. பிறகு இந்தியாவில் 1996 ஆம் ஆண்டு உலக அழகி போட்டி நடந்தது. தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக அழகி போட்டி இந்தியாவில் நடைபெற்று வந்தது.
டில்லியில் 71-வது உலக அழகி போட்டி கடந்த மாதம் 18-ந்தேதி தொடங்கியது. நேற்று இதன் இறுதிப்போட்டி மும்பையில் நடைபெற்றது. நேற்றிரவு 7.30 மணிக்குத் தொடங்கிய இறுதிப்போட்டியை இந்தி திரைப்பட இயக்குநர் கரண் ஜோகர், முன்னாள் உலக அழகி மேகன் யங் ஆகியோர் இணைந்து நடத்தினர்.
இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 117 பேர் கலந்து கொண்டனர். இறுதிச்சுற்றுக்கு இந்தியாவைச் சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் தகுதி பெற்று இருந்தனர். மேலும் மங்கோலியா, அயர்லாந்து, எஸ்தோனியா, வடக்கு அயர்லாந்து, இந்தோனேசியா, ஹங்கேரி, நெதர்லாந்து, போர்ச்சுகல், வேல்ஸ், துனிசியா, போட்ஸ்வானா, கவுதமாலா, ஜிப்ரால்டர் நாடுகளை சேர்ந்த அழகிகளும் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்று இருந்தனர்.
இதில் செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா, 2024-ம் ஆண்டுக்கான 71வது உலக அழகி பட்டத்தை வென்றார். லெபனான் நாட்டை சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாம் இடம் பிடித்தார். இறுதிச்சுற்றில் வெற்றி பெற்ற கிறிஸ்டினா பிஸ்கோவாவுக்கு 2021-ம் ஆண்டு பட்டம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தைச் சூட்டினார்.
போட்டியின் முதல் 4 இடங்களுக்குள் இந்தியா சார்பில் பங்கேற்ற சினி ஷெட்டி, வர முடியவில்லை. இவர் 2022-ம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை வென்றவர் ஆவார். இதுவரை உலக அழகி பட்டத்தை 6 முறை இந்தியா வென்று உள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ரீட்டா பரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) மற்றும் மனுஷி சில்லார் (2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்றிருந்தனர்.