சென்னை: கிழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கின் சீராய்வு மனுவை விசாரித்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணைக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன்படி மார்ச் 25, 26ந்தேதிகள் விசாரணை நடைபெற உள்ளது.

கடந்த காலங்களில் அமைச்சர்களாக பணியாற்றிய பலர்மீது ஊழல் வழக்குகள் பதியப்பட்ட நிலையில், அவர்களில் பலர் தற்போது அமைச்சர்களாக உள்ளதால், வழக்குகள் நீர்த்துப்போகும் வகையில், வழக்கை விசாரணை நடத்திய காவல்துறையினரும், சாட்சிகளும் பல்டியடித்து வருகின்றனர். இதனால், குற்றம் சாட்டுப்பட்டுள்ள பல அமைச்சர்கள் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது நீதித்துறையின் மீதான நம்பக்கத்தன்மையை கேள்விக்குறியாக்கியது. இதையடுத்து, விடுவிக்கப்பட்ட முக்கிய இந்நாள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் சூமோட்டோ வழக்காக மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளது. இதனால், பல அமைச்சர்கள் மீதான வழக்குகள் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, முன்னாள் அமைச்சர்களான கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பொன்முடி, பா.வளர்மதி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றங்கள் விடுதலை செய்த நிலையில் அதனை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்ததன் மூலம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் விசாரணை நடத்தி வருகிறார்.
2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை அன்றைய அதிமுக அரசில் வருவாய்த்துறை அமைச்சராகவும், சில காலம் முதலமைச்சராகவும் ஓ.பன்னீர் செல்வம் பதவி வகித்தார். இந்த காலகட்டத்தில் தனது வருமானத்தை மீறி அளவுக்கு அதிகமாக 1.77 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத், ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு மதுரையிலும் பின்னர் சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்திலும் நடைபெற்று வந்தது. கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், ஓ.பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை திரும்பப் பெற அனுமதி கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனுவினை ஏற்ற நீதிமன்றம், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுதலை செய்து 2012ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு 11 ஆண்டுகள் முடிந்த நிலையில், எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன் வந்து மறு ஆய்வுக்கு எடுத்தார். இறுப்பினும் ஆனந்த் வெங்கடேஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு இடமாறுதல் ஆனதால், இந்த வழக்கு விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டது. இறுப்பினும் கடந்த ஜனவரி மாதத்தில் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கே திரும்பியதால் வழக்கின் விசாரணை சூடுபிடித்தது.
இதனை அடுத்து தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை தகுதியின் அடிப்படையில்தான் ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் ஓபிஎஸின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக உள்ள கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதி விசாரணையை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நடத்தினார். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறை பதில் மனுத்தாக்கல் செய்ய வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மார்ச் 27ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. அதுபோல, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசுத்தரப்பு விளக்கத்தை அறிவதற்காக மார்ச் 27ஆம் தேதிக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
இந்த நிலையில்,ஓபிஎஸ் மீதான வழக்கு விசாரணையை வரும் மார்ச் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டு உள்ளார்.
[youtube-feed feed=1]