டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தற்போதைய எம்.பி.யான ராகுல்காந்தி மீண்டும் வயநாடு தொகுதியிலேயே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தின் ஷிவமோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நடிகர் சிவ்ராஜ்குமார் மனைவி களமிறக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் கருணாகரனின் மகள் பத்மஜா, சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில், அவர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டி யிட உள்ளதாகவும், அவர் வயநாடு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதுபோல, கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுவார் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இதனால், ராகுல்காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் பரவின. இந்த நிலையில், ராகுல்காந்தி வயநாட்டில்தான் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது. இதனால் அங்கு மும்முனை போட்டி நிலவுகிறது.
மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் டெல்லியில் வெள்ளிக்கிழமை (மார்ச் 9ந்தேதி மாலை) வெளியிடப்பட்டது.
அதில், சத்தீஸ்கரின் 6 தொகுதிகள், கர்நாடகாவின் 7 தொகுதிகள், கேரளாவின் 16 தொகுதிகள், தெலங்கானாவின் 4 தொகுதிகள், மேகாலயாவின் 2 தொகுதிகள், லட்சத்தீவு, நாகலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுராவின் தலா தொகுதியில் போட்டியிடும் 39 வேட்பாளர்கள் அடங்கிய இந்தப் பட்டியலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில்,50 வயதுக்கு உட்பட்டவர்கள் 12 பேர், 50-60 வயதுடையவர்கள் 8 பேர், 61-70 வயதுடைய 12 பேர், 71-76 வயதுடைய 7 பேர் என்றும்,
முதல்கட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் இவர்களில் 14 பேர் பொதுப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், 24 பேர் ஓபிசி, எஸ்.சி., எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்தவர்கள் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பகேல் ராஜ்னங்காம் தொகுதியில் போட்டியிடவுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சியை பறிகொடுத்த நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவரான பூபேஷ் பகேலுக்கு எம்.பி.தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆலப்புழா, சசி தரூர் திருவனந்தபுரத்தில் போட்டியிடுகின்றனர்.
ராஜ்னம்த்லோன் (சத்தீஸ்கர்) – பூபேஸ் பாகல்
மாண்டியா – வெங்கட்ராம கவுடா
பெங்களூரு (ஊரகம்) – டி.கே.சுரேஷ்குமார்
வயநாடு – ராகுல் காந்தி
திருவனந்தபுரம் – சசி தரூர்
ஆலப்புழா – கே.சி.வேணுகோபால்
துர்க் (சத்தீஸ்கர்) – ராஜேந்திர சாஹு
திருச்சூர் – முரளீதரன்
பத்தனம்திட்டா – ஆண்டோ ஆண்டனி
கண்ணூர் – கே.சுதாகரன்
ஷிவ்மோகா – கீதா சிவராஜ்குமார் (நடிகர் சிவராஜ்குமார் மனைவி)
வயநாடு தொகுதியில் ராகுல்காந்திக்கு எதிராக களமிறங்குகிறார் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த ஆனி ராஜா!