சென்னை: மத்தியஅரசு அலுவலகமான சென்னை போர்ட் டிரஸ்ட் அலுவலகத்தில் ரூ.10.37 கோடி வரி பாக்கிக்காக, சென்னை மாநகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டியது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் சொத்து வரி வசூலிப்பது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 2023 – 24ம் நிதியாண்டில், 1,650 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிதியாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் முடிவடைவதால், சொத்து வரி வசூலிப்பில் தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை (பிப்ரவரி) 1,270 கோடி ரூபாய் என, 70 சதவீதம் சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் வரி செலுத்தாதவர்களிடம் இருந்த வரியை வசூலிப்பதில் அதிரடி காட்டி வருகிறது.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு பல ஆண்டுகளாக சொத்து வரியை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ள, சென்னை கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்ட் டிரஸ்ட் அலுவலகத்திற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்த போர்ட் டிரஸ்ட் (துறைமுக கழகம்) அலுவலகம் அமைந்து உள்ளது. இந்த அலுவலகம் சார்பில் பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்த வில்லை என்று கூறப்படுகிறது. சொத்து வரி பாக்கி குறித்து பல முறை மாநகராட்சி தரப்பில், தகவல் தெரிவித்தும் இன்னும் அந்த தொகை செலுத்தப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில், நிலுவையில் உள்ள ரூ.10.37 கோடி சொத்து வரியை செலுத்தவில்லை என்பதால், மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்டுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், குறிப்பிட்ட அவகாசத்திற்குள் வரி செலுத்தவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இதுவரை சொத்து வரி செலுத்தாதவர்கள், வரி பாக்கி வைத்துள்ளவர்கள் அந்த தொகையை செலுத்தவில்லை எனில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சொத்து வரி செலுத்தாத மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.