சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில், அந்த கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளது. இதை அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி உறுதிப்படுத்தினார்.
மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் ஏற்கனவே கூட்டணி, தொகுதி பங்கீடுகளில் தீவிரம் காட் வருகின்றனர். திமுக தலைமையிலான கூட்டணி எந்தவித சலசலப்புமின்றி தொடரும் நிலையில், நாம் தமிழர் கட்சி எப்போதும் போல தனித்தே போட்டியிடுகிறது. ஆனால், பாஜக தலைமையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, அதிமுக தனியாக கூட்டணி அமைத்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் 4 முனை போட்டி நிலவும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கடந்த முறை பாஜக அதிமுக கூட்டணியில் இருந்த தாமாகா பாஜகவுடன் இணைந்த நிலையில், தேமுதிக, பாமக புதிய தமிழகம் உள்பட சில கட்சிகளை இழுக்க அதிமுக, பாஜக இடையே கடும் போட்டி நிலவி வந்தது. அதிமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரச்சாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழுக்கள் அமைத்து, தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதிமுக சார்பில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகமும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி தொடர்பாக, பாமக, தேமுதிக தலைவர்களை சந்தித்து பேசிய நிலையில், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியை அதிமுக பேச்சுவார்த்தை குழு அவருடைய நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் இன்று சந்தித்தது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, பெஞ்சமின், ஜெயக்குமார் ஆகியோர் கிருஷ்ணாசாமியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி , “இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் சுமுகமாக முடிந்துள்ளது. கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. என்னென்ன தொகுதிகள் என்பது அடுத்தக்கட்டப் பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்படும். அதிமுக கூட்டணி மிக வலுவான கூட்டணியாக அமையும். தேர்தலுக்கும் இன்னும் நாட்கள் உள்ளது. விரைவில் எந்த தொகுதி என்பதனை பேசி முடிவு எடுப்போம்” என தெரிவித்தார்.
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கு ஆதரவாக கடந்த சில ஆண்டுகளாக பேசி வந்த நிலையில், திடீரென அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது, பாஜக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.