டெல்லி: ஓபிஎஸ் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு ஓபிஎஸ்க்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கும் தடை விதிக்க மறுத்து விட்டது.
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, முந்தைய ஆட்சியாளர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடரப்படுவதும், பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, பாதிக்கபட்ட நபர்கள் விடுதலை செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் நீதித்துறைமீது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில்தான திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, பல அமைச்சர்கள், தங்கள் மீதான ஊழல் வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றங்களால் அடுத்தடுத்து விடுதலை செய்யப்பட்டது நீதித்துறை மீதனா நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்க செய்தது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கீழமை நீதிமன்றங்களின் நடவடிக்கையை கடுமையாக விமர்சனம் செய்வததுடன், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பச்சோந்தி போல் நிறம் மாறுகின்றனர் என்று கடுமையாக சாடியதுடன், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட வழக்கை தானாகவே முன்வந்து (சூமோட்டோ) விசாரிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும், அதிமுக அமைச்சர்கள் வளர்மதி, ஓபிஎஸ்போன்றோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து விசாரணை நடத்தப்போவதாக அறிவிக்கப்ப ட்டது. இதில் பொன்முடிக்கு ஏற்கனவே 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மீதான வழக்கில் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. மற்றவர்களின் ஊழல் வழக்குகளுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்ட நிலையில், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பொன்முடி, ஐ.பெரியசாமி, ஓபிஎஸ் மறு ஆய்வு வழக்குகளின் இறுதி விசாரணை பிப்ரவரி 5ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவித்தார்.
அதன்படி அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கின் மீதான விசாரணை பிப்ரவரி 11 மற்றும் 12 தேதிகளில் நடைபெற்றது. இதனையடுத்து நீதிபதி, ஐ.பெரிய சாமியை விடுவித்த உத்தரவு செல்லாது என்றும் தீர்ப்பளித்தார். மேலும், வழக்கை ஜூலை மாதத்திற்குள் விசாரித்து முடிக்கவும், தினசரி அடிப்படை யில் விசாரணை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சர் தங்கம்தென்னரசு மீதான வழக்கு பிப்ரவரி 28, 29ந்தேதி நடைபெற்றது. அதுபோல, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கின் விசாரணை மார்ச் 5 மற்றும் 6ஆம் தேதியும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வழக்கின் விசாரணை மார்ச் 7 மற்றும் 8ஆம் தேதியிலும் நடைபெற உள்ளது.
இந்த வழக்குகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தனது வாதங்களை மார்ச் 11ஆம் தேதிக்கு முடிப்பார். அதன்பிறகு இவ்வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தன்மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம்,அதை விசாரிக்க மறுத்ததுடன், சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்கவும் மறுத்து விட்டது. இதனால், ஓபிஎஸ் விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்.
ஓபிஎஸ் வழக்கு பின்னணி:
2001 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற ஓ.பி.எஸ்., வருவாய்த்துறை அமைச்சராகப் பதவியேற்றார். டான்சி வழக்கில் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டதால், ஜெயலலிதாவிடமிருந்து முதல்வர் பதவி பறிபோனது. அதனால், தமிழ்நாட்டின் திடீர் முதல்வரானார் ஓ.பி.எஸ்.க்கு பிறகு, மீண்டும் ஜெயலலிதா முதல்வரான பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சராக ஓ.பி.எஸ் பதவி வகித்தார்.
2006-ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அப்போது, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், ஓ.பி.எஸ், அவரின் குடும்பத்தினர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட அந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக ஓ.பி.எஸ் சேர்க்கப்பட்டார். அவருடன் அவரின் மனைவி விஜயலெட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, ராஜாவின் மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன் மற்றும் அவரின் மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாகச் சேர்க்கப்பட்டனர்.
தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 2009 ஜூலை 30-ம் தேதி, இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘2001 சட்டமன்றத் தேர்தலின்போது ஓ.பி.எஸ் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு, 17 லட்சத்து 44 ஆயிரத்து 840 ரூபாய். தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று, வருவாய்த்துறை அமைச்சர், முதல்வர், பொதுப்பணித்துறை அமைச்சர் என பதவிகள் வகித்த ஐந்து வருடங்களில், ஓ.பி.எஸ்-ஸின் சொத்து மதிப்பு ஒரு கோடியே 77 லட்சம் ரூபாயாக உயர்ந்தது. அதாவது, ஐந்து ஆண்டுகளில் 374 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது’ என்று குற்றம்சாட்டப்பட்டது. 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை நடைபெற்ற அ.தி.மு.க ஆட்சியில் முதலமைச்சராகவும், வருவாய்த்துறை அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 1.72 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
2012-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி தன்மீதான ஊழல் வழக்கை, மதுரை நீதிமன்றத்திலிருந்து, சிவகங்கை நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஓ.பன்னீர்செல்வம் மனுத் தாக்கல் செய்தார். இதை நீதிபதி பெரிய கருப்பையா விசாரித்து வழக்கை மதுரை நீதிமன்றத்திலிருந்து, சிவகங்கையிலுள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து, சிவகங்கை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அதன் பிறகு, திடீர் திருப்பங்கள் நிகழ்ந்தன. 2012 அக்டோபர் 27-ம்தேதி தமிழக சபாநாயகர் தனபால், ஓ.பி.எஸ் மீது வழக்கு போடுவதற்காக ஏற்கெனவே சட்டமன்றம் கொடுத்திருந்த அனுமதியைத் திரும்பப் பெற்றார்.
அதைத்தொடர்ந்து சிவகங்கை நீதிமன்றத்தில், ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஓர் அறிக்கையைத் தாக்கல் செய்தது. ‘குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை நிரூபிக்கும்விதமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே, இந்த வழக்கைத் திரும்பப் பெறுகிறோம்’ என்றது. அதன் அடிப்படையில், இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வழக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், 2012-ம் ஆண்டு ஓ.பி.எஸ் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கப்போவதாக எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்திருக்கிறார்.