சென்னை: நிலத்தடி நீரை உறிஞ்சும், சீமைக்கருவேல மரத்தை அகற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளது. சீமைக்கருவேலத்தை அகற்ற ராக்கெட் வேண்டுமா.? என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தின் வறட்சிக்கு காரணமான சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதை அகற்றுவதில் அரசு மெத்தனம் காட்டி வருகிறது. பல விவசாயிகள் இந்த சீமைக் கருவேல மரங்களை வைத்து வாழ்வாதாரத்தை பேணி வருகின்றனர். ஆனால், இந்த மரங்களால், நிலத்தடிநீர் பாதிக்கப்பட்டு விவசாயத்திற்கும், குடிக்கவும் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அல்லல் படுகின்றனர்.
இதற்கிடையில், சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்பட சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை. தமிழக அரசு கடமைக்காக வழக்கை நடத்துவது போல உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
வனப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் உள்ள சிரமத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சமதள பகுதிகளில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதில் என்ன சிரமம்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஒரு கிராமம் அல்லது ஒரு பஞ்சாயத்தில் கூட முழுமையாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படவில்லை. சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு ராக்கெட் வேண்டுமோ என கேள்வி எழுப்பியதுடன், இதற்கெல்லாம் ராக்கெட் தொழில்நுட்பம் தேவையில்லை, சாதாரண விவசாயிகளையும் தொழிலாளர்களையும் வைத்தே அகற்ற முடியும் என்று கூறியதுடன், சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் குறித்தும், 30 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது குறித்தும் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.