புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கக்கூடிய மாத்திரையை மும்பையில் உள்ள இந்தியாவின் முதன்மையான புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையமான டாடா இன்ஸ்டிடியூட் கண்டுபிடித்துள்ளது.
10 ஆண்டு ஆராய்ச்சியின் பலனாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மாத்திரை நோயாளிகளுக்கு இரண்டாவது முறையாக புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் மற்றும் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி போன்ற சிகிச்சையின் பக்க விளைவுகளை 50 சதவீதம் குறைக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள் வெளியிட்டிருக்கும் தகவலில், “மனித புற்றுநோய் செல்களை எலிகளுக்குப் புகுத்தி ஆய்வு செய்ததில். இவை எலிகளில் புற்றுநோய் கட்டிகள் உருக்கியது. கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் அவற்றுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.
இந்த புற்றுநோய் செல்கள் இறக்கும் போது, அவை குரோமாடின் துகள்கள் எனப்படும் சிறிய துண்டுகளாக உடைந்து, இரத்த ஓட்டத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்குச் சென்று ஆரோக்கியமான செல்களுக்குள் சென்று அவற்றை புற்றுநோயாக மாற்றுவதை உணர்ந்தனர்.
டாடா மெமோரியல் சென்டர் (டிஎம்சி), தங்கள் ஆராய்ச்சியில், இறக்கும் புற்றுநோய் செல்கள் உயிரணு இல்லாத குரோமாடின் துகள்களை (cfChPs அல்லது குரோமோசோம்களின் துண்டுகள்) வெளியிடுகின்றன, இது ஆரோக்கியமான செல்களை புற்றுநோயாக மாற்றும். சில cfChP கள் ஆரோக்கியமான குரோமோசோம்களுடன் இணைந்து புதிய கட்டிகளை ஏற்படுத்தலாம்.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண, ரெஸ்வெராட்ரோல் மற்றும் காப்பர் (R+Cu) கொண்ட புரோ-ஆக்ஸிடன்ட் மாத்திரைகளை எலிகளுக்கு கொடுத்ததில் இந்த R+Cu மாத்திரைகள் ஆக்ஸிஜன் ரேடிக்கல்களை உருவாக்கி குரோமாடின் துகள்களை அழிப்பதை கண்டுபிடித்தனர்.
‘R+Cu’ வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, வயிற்றில் ஆக்ஸிஜன் ரேடிக்கல்களை உருவாக்குகிறது, அவை விரைவாக உறிஞ்சப்பட்டு இரத்த ஓட்டத்தில் நுழைகின்றன. ஆக்ஸிஜன் ரேடிக்கல்கள் புழக்கத்தில் வெளியிடப்படும் cfChP களை அழித்து, ‘மெட்டாஸ்டேஸ்கள்’ – உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு புற்றுநோய் செல்களை நகர்த்துவதைத் தடுக்கின்றன.
R+Cu கீமோதெரபி நச்சுத்தன்மையைத் தடுக்கிறது என்று கூறும் ஆராய்ச்சியாளர்கள், இந்த மாத்திரை புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளை சுமார் 50 சதவிகிதம் குறைக்கும் மற்றும் இரண்டாவது முறை புற்றுநோயைத் தடுப்பதில் 30 சதவிகிதம் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், கணையம், நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் ஆகியவற்றிலும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகின்றனர்.
சோதனையில் இந்த மாத்திரை வெற்றிபெற்றுள்ளதை அடுத்து இந்திய உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதிக்காக விண்ணப்பித்திருப்பதாகவும். இதற்கான அனுமதி கிடைத்ததும் மாத்திரைகள் தயாரிக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர்கள் இந்த மாத்திரை ஒன்றின் விலை ரூ. 100 ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.