பாங்காக்
தாய்லாந்து நாட்டில் முன்னாள் பிரதமர் ஷினவத்ரா 6 மாதங்களுக்குப் பிறகு சிறையில் இருந்து விடுதலை செய்யபட்டுள்ளார்.
கடந்த 2001 முதல் 2006 வரை தாய்லாந்து நாட்டின் பிரதமராக இருந்த தக்சின் ஷினவத்ரா (வயது 74). 2006-ம் ஆண்டு நடந்த ராணுவ சதியால் ஆட்சியில் இருந்து விலக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து வெளிநாட்டுக்குத் தப்பியோடி தஞ்சம் புகுந்த அவர், 16 ஆண்டுகளாக தலைமறைவானார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாடு திரும்பிய அவருக்குச் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது. தனது பதவிக் காலத்தின்போது அதிகார துஷ்பிரயோகம் செய்தல், ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவருக்கு எதிராக 8 ஆண்டுக்கால சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அவர், அரச மன்னிப்பு கோரியதன் தொடர்ச்சியாக அவருடைய சிறைத் தண்டனை ஓராண்டாகக் குறைக்கப்பட்டது. அந்நாட்டில் வயது முதிர்வு அல்லது மருத்துவ சூழல் அடிப்படையில், அந்நாட்டில் பரோல் வழங்கப்படும். அதன்படி 6 மாத காலம் சிறையில் இருந்த அவருக்கு இந்த மாத தொடக்கத்தில் பரோல் கிடைத்தது.
ஷினவத்ரா அதிக ரத்த அழுத்தம் மற்றும் குறைவான பிராணவாயு அளவு உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகிறார். தற்போது அவருக்குக் கிராமப்புற மற்றும் உழைக்கும் பிரிவினரிடமிருந்து பேராதரவு கிடைத்துள்ளது. நேற்று ஷினவத்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி அவர் பாங்காக் நகரில் உள்ள காவல்துறை பொது மருத்துவமனையில் இருந்து அவருடைய மகள்களான பேடங்டார்ன் மற்றும் பின்டோங்டா ஷினவத்ரா ஆகியோருடன் வெளியே வந்து, கருப்பு நிற வேனில் ஏறி பாங்காங்கில் உள்ள அவருடைய குடியிருப்புக்கு ஓய்வெடுக்கச் சென்றார்.