டெல்லி: ஊழல் எங்கே என்று பிரதமர் தொடர்ந்து கூறுகிறார். மோசடி எங்கே? என்று கேட்கிறார், இப்போது மோடிஜி உங்கள் கண் முன்னே உங்கள் ஊழல், இந்த அரசு ஊழல்…” என காங்கிரஸ் மூத்த தலைவரும், வழக்கறிஞருமான கபில்சிபல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதுபோல மூத்த காங்கிரஸ் தலைவர்களான ஜெய்ராம் ரமேஷ், தாக்கூர் உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேர்தல் பத்திரம் எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி பல்வேறு வாதங்களை அதிரடியாக எடுத்து வைத்தவர், முன்னாள் மத்திய அமைச்சரும், பிரபல வழக்கறிஞருமான கபில்சிபல். இன்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டங்களை ரத்து செய்துள்ளதுடன், தேர்தல் பத்திரம் மூலம் வாங்கப்பட்ட பணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளுக்கும் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. பாரத் ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரம் வினியோகிப்பதை உடனடியான நிறுத்த வேண்டும். இதுதொடர்பான தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். அவர்கள் மார்ச் 31-ந்தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அரசியல் கட்சிக்கு செல்லும் நிதி பொதுமக்களுக்கு தெரியப்படுத்துவது அவசியம். கருப்பு பணத்தை ஒழிப்பது என்பதற்காக தகவல் அறியும் உரிமை சட்டத்தை மீறுவது நியாயம் அல்ல என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இந்த தீர்ப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை எம்.பி.யுமான கபில் சிபல், அரசியல் கட்சிகளுக்கும், நிதி அளிப்பவர்களுக்கும் இடையிலான பிணைப்பு குறித்து நாங்கள் அறிந்து கொள்வோம். அதேபோல், பிரதிபலன் (Quid pro quo) குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், ஒருவர் கூட இதுபோன்ற மிகப்பெரிய தொகையை பிரதிபலன் இல்லாமல் வழங்க மாட்டார்கள்.
ரூ. 10 லட்சம் அல்லது 15 லட்சத்திற்காக யாரும் தேர்தல் பத்திரம் கொடுக்கமாட்டார்கள். அது கோடிக்கணக்கில் இருக்கும். எனவே அரசியல் கட்சிக்கு 5000 கோடி நிதி அளித்திருந்தால் பணக்காரர்கள் மட்டுமே அதைச் செய்திருக்க முடியும். மேலும் அவர்கள் செயல்பாட்டில் சில சலுகைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்று கற்பனை செய்து கொள்ளலாம்.
பிரதமர் மோடி ஊழல் எங்கே? ஊழல் எங்கே? என கேட்கிறார். இப்போது மோடி ஜி, உங்கள் கண்முன் உங்களுடைய ஊழல், இந்த அரசாங்க ஊழல்” என விமர்சித்து உள்ளார்.
இதுகுறித்து கூறிய காங்கிரஸ் தலைவர் ஜெயா தாகூர் “அரசியல் கட்சியின் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களின் நலனை இந்த தீர்ப்பு பாதுகாக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மோடி அரசின் தேர்தல் பத்திரத் திட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களையும், இந்திய அரசியலமைப்பையும் மீறுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் பத்திரங்களை அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவிக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. இந்த தீர்ப்பு பணத்தாள்களை விட வாக்குகளின் சக்தியை வலுப்படுத்தும்.
மோடி அரசு சந்தாதாரர்களுக்கு (தேர்தல் பத்திரம் மூலம் நிதி வழங்குபவர்கள்) சிறப்பு உரிமைகளையும் விலக்குகளையும் வழங்கி வருகிறது. அதே நேரத்தில் அன்னதத்தாக்களுக்கு (விவசாயிகள்) அநீதி இழைக்கப்படுகிறது.
வாக்காளர் சரிபார்க்கக்கூடிய காகித தணிக்கை சோதனை (விவிபிஏடி) பிரச்சினையில் அரசியல் கட்சிகளைச் சந்திக்க தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனை உச்ச நீதிமன்றம் கவனத்தில் கொள்ளும் என நாங்கள் நம்புகிறோம். வாக்குப்பதிவு நடைமுறையில் எல்லாம் வெளிப்படையாகவும், தெளிவாகவும் இருந்தால், அரசியல் கட்சிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் ஏன் நேரம் கொடுக்கக்கூடாது?. என்று குறிப்பிட்டுள்ளார்.