டெல்லி: மத்திய பாஜக அரசு கொண்டு வந்த, தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தேர்தல் பத்திரம் மூலம் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி சிறு நிறுவனங்களிடம் இருந்தும் வசூலை வாரி குவித்துள்ளன. தற்போது வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மோடி அரசின் தேர்தல் பத்திரம் திட்டத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், அதை மீறி செயல்படுத்தப் பட்டு வந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திரம் திட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உத்தரவிட்டு அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
தேர்தல் பத்திரம் என்றால் என்ன?
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தது. இதில் முக்கியமான தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டம். கடந்த 2017ம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்தது. மக்களவை ஒப்புதல் இல்லாமலேயே, கடந்த 2018 ஜனவரி 29 முதல் தேர்தல் பத்திர முறை நடைமுறைக்கும் வந்தது.
இந்த தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாகும். உறுதிமொழிப் பத்திரம் போன்ற இந்த தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். ஸ்டேட் வங்கியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 கிளையில் இருந்து மட்டுமே தேர்தல் பத்திரத்தை பெற முடியும்.
இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம்.
KYC விவரங்கள் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் இந்த பத்திரங்களை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெறத் தேவையில்லை. இதன் மூலம் எந்த ஒரு இந்திய குடிமகன் அல்லது நிறுவனம், அவர்கள் விரும்பும் கட்சிக்கு நன்கொடை வழங்கலாம். இந்த நிதி வழங்குபவர்கள், தங்களது அடையாளத்தை வெளியிடாமல் இதன்மூலம் நன்கொடை அளிக்கலாம். அதாவது கட்சிக்கு நிதி வழங்குபவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள், மற்றவர்கள் அறிய முடியாதது இதன் கூடுதல் அம்சமாகும்.
தேர்தல் பத்திரத்தின் ஆய்வுட் காலம் வெறும் 15 நாட்கள் மட்டுமே. அவற்றை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த பத்திரத்தை பெற்ற கட்சிகள் 15 நாட்களுக்குள், எந்தவித கட்டுபாடுமின்றி, அதை நிதியாக மாற்றிக் கொள்ளலாம், இல்லையெனில் அந்த தேர்தல் பத்திரம் பிரதமர் நிவாரண நிதியில் டெபாசிட் செய்யப்படும் என அந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒரு கட்சி தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற வேண்டும் என்றால், சட்டப்பேரவை அல்லது மக்களவைத் தேர்தலில் குறைந்தது ஒரு சதவீத வாக்குகளை பெற்றிருக்க வேண்டும்.
தேர்தல் பத்திரங்கள், நாணயம் போன்று பலமுறை கை மாறுவதாலும் அது யார் பெயரில் வழங்கப்படுகிறது என்பது தெரியாததாலும் இந்த பத்திரங்கள் மூலம் பண மோசடி நடக்கலாம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தில்,, நிதி வழங்குபவர்களின் விவரங்கள் ரகசியமாக வைத்திருப்பது, கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. அரசியல் கட்சிகளுக்குத்தான் சாதகமாக இருக்கிறது என்கிற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்ற விமர்சனமும் உள்ளது.
இத்திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லை என்று எதிர் கட்சிகள் கருத்து தெரிவித்து வந்தன, இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டங்களும் நடைபெற்றது.
இந்தத் திட்டத்தைத் தொடங்கும் போது, தேர்தல் பத்திரங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் முறையை முறைப்படுத்தும் என்று இந்திய அரசு கூறியது. ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர் யார் என்பது ரகசியமாக வைக்கப்படுவதாகவும் இது கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக, மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்பப்பட்டு வந்தது.
தேர்தல் ஆணையம் எதிர்ப்பு:
2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் பத்திரங்கள் அரசியல் நிதியில் வெளிப்படைத் தன்மையை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அவை இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்த வெளிநாட்டு கார்ப்பரேட் சக்திகளை அழைப்பதற்கு சமம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இதன்மூலம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்படும் ஷெல் நிறுவனங்களை திறக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது
ரிசர்வ் வங்கி எதிர்ப்பு:
கறுப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்க, பணமதிப்பழிப்பு மற்றும் எல்லை தாண்டிய மோசடியை அதிகரிக்க தேர்தல் பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பலமுறை எச்சரித்துள்ளது. தேர்தல் பத்திரங்களை ‘நிதி வழங்குவது குறித்த தெளிவில்லாத முறை’ என்று குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி, இந்த பத்திரங்கள் நாணயம் போன்று பலமுறை கை மாறுவதாலும் அது யார் பெயரில் வழங்கப்படுகிறது என்பது தெரியாததாலும் இந்த பத்திரங்கள் மூலம் பண மோசடி நடக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இதைத்தொடர்ந்து, தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் மனுவை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான Common Cause இணைந்து 2017ல் தாக்கல் செய்தன. இரண்டாவது மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2018 இல் தாக்கல் செய்தது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவின் கீழ் ஒரு குடிமகனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தன.
இந்த வழக்கு கடந்த 2022 ம் ஆண்டு தலைமை நீதிபதி ஒய்.டி. சந்திரசூட் தலைமையில் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து இந்த வழக்கை விசாரிக்க 2023ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது. பின்னர், வழக்கின் முக்கியதுவம் கருதி 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் 31ம் தேதி தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், பர்தி வாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தேர்தல் பத்திரங்கள் ஊழல்வாதிகளை பாதுகாக்கிறது என மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் வாதத்தை முன்வைத்தார்.
மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி, ’’பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்கக் கூடாது என்றும் நியாயமான கட்டுப்பாடுகள் தேவை எனவும்’’ வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 1-ம் தேதி ஒத்தி வைத்தனர். தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நவம்பர் 1ம் தேதி நடந்த விசாரணையில், ’’செப்டம்பர் 30 வரை கட்சிகள் பெற்ற தேர்தல் பத்திரத்தை, தேர்தல் ஆணையம் சமர்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிந்து கடந்த நவம்பர் 2-ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒருமித்த தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர்.
தீர்ப்பில் நீதிபதிகள் கூறியிருப்பதாவது:- Representation of people act-ன் பிரிவு 29(1)(c) திருத்தம் மற்றும் ஐடி சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது; தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பானது. தேர்தல் பத்திர விவரங்களை வழங்காமல் இருப்பதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை. தேர்தல் பத்திர முறைகளை ரத்து செய்யப்படுகிறது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் வகையில் திருத்தப்பட்ட கம்பெனி சட்டம் அரசமைப்புக்கு எதிரானது தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்த வருமான வரி திருத்த சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்த சட்டம் ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.
‘தேர்தல் பத்திர திட்டம்’ ரத்து – இது, அரசியலமைப்புக்கு எதிரானது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…