டெல்லி: தடையை மீறி டெல்லிக்கு வரும் விவசாயிகளை தடுத்து நிறுத்தி கைது செய்து வரும் காவல்துறையினர், விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தடுத்து வருகின்றனர். இதனால் டெல்லியில் பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் இன்று டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால், தலைநகர் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில், 144 உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று மத்திய அமைச்சர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் விவசாயிகள் அறிவித்தப்படி, இன்று காலை முதல் டெல்லியை நோக்கி பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் பேரணியாக வர தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், டெல்லி – அம்பாலா எல்லையில் சாம்பு என்ற இடத்தில் விவசாயிகள் பேரணியாக வருவதால், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி கலைக்க காவல்துறை முயற்சி செய்து வருகிறது. இருப்பினும், கண்ணீர் புகைக் குண்டுகளை பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக முன்னேறி வருகின்றனர். நூற்றுக்கணக்கான கண்ணீர் புகை குண்டுகள் வீசியதால், டெல்லி புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. சில இடங்களில் விவசாயிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
டெல்லி-நொய்டா-டெல்லி (டிஎன்டி) சாலையில் நொய்டாவிலிருந்து டெல்லி நோக்கி கடும் வாகனப் போக்குவரத்து, ஏற்பட்டு நெரிசல் ஏற்பட்டுள்ளது. டெல்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு மற்றும் தடைகள் இருப்பதால், போராட்டம் நடத்தும் விவசாயிகள் தேசியத் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்கிறார்கள்.
விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. கான்கிரீட், இரும்புவேலிகள் அமைத்து முழுவதும் மூடி முன்பு இல்லாத அளவுக்கு தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது மத்திய அரசு. இதனால், டெல்லி முழுவதும் உச்சகட்ட பதற்றத்தில் காணப்படுகிறது.
Photos and Videos: Thanks ANI