சென்னை

கிளாம்பாக்கத்தில் போதுமான அளவு பேருந்துகள் இயங்கவில்லை எனச் சொல்வது வதந்தி என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

நேற்றும் இன்றும் நாட்களாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குப் பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் சேகர் பாபு இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம்,

“சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வழக்கமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  எப்போதும் நள்ளிரவு நேரத்தில் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படும். நள்ளிரவு 12 மணிக்கு மேல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயங்கின. அதாவது பெரும்பாலான வெளியூர் பேருந்துகள் நள்ளிரவு 12 மணிக்கு முன்பாகவே புறப்படும்.

எனவே கிளாம்பாக்கத்தில் இருந்து போதிய பேருந்துகள் இயங்கவில்லை என்பது வதந்தி ஆகும் . ஒரு சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டுப் பொய் வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.  குறிப்பாக நேற்று முன் தினம்  இரவு வழக்கத்தை விட திருச்சிக்கு 70 பேருந்துகள் கூடுதலாகவே இயக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிலர் போராட்டம் நடத்தியது சந்தேகம் அளிக்கிறது. நள்ளிரவு கிளாம்பாக்கத்திற்கு வரும் பயணிகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து வழக்கம்போல் இயங்கும் எனக் கூறி உரிமையாளர்கள் குழப்பம் ஏற்படுத்துகின்றனர்”

என்று தெரிவித்தார்.