சென்னை: கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இன்று தமிழ்நாட்டின் 27 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்பட பல இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள ஒரு இந்து கோவில் முன்பு கடந்த 2022 ம் ஆண்டு அக்டோபர் மாதம், காரில் இருந்த சிலிண்டர் வெடித்து, அதில் இருந்த ஜமேஷா முபின் என்ற பயங்கரவாதி சம்பவ இடத்திலேயே பலியானார். அவருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. மேலும், பல இடங்களில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டது தொடர்பான குறிப்புகளும் கைப்பற்றப்பட்டன. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதுடன், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக, இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.பின்னர் இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அவர்கள் விசாரணை நடத்தியதில் ஏற்கனவே கைதான 6 பேர் உள்பட கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 11 பேரையும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, தொடர்புடைய கோவை உக்கடம் ஜி.எம். நகரைச் சேர்ந்த முகமது இத்ரீஸ் என்பவரும், அசாருதீன் என்பவரையும் என்ஐஏ கைது செய்து விசாரணை நடத்தியது.
அதில் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாட்டில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். உக்கடம் அல் அமீன் நகரில் ஏ.சி மெக்கானிக் ரகுமான் என்பவர் வீடு உட்பட கோவையில் மட்டும் 12 இடங்கள் உள்பட மதுரை, நெல்லை, சென்னை என மொத்தம் 27 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் கோவை, சென்னை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 27 இடங்களில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது.