அருள்மிகு வதாரண்யேஸ்வரர் திருக்கோயில், வள்ளலார் கோயில், மயிலாடுதுறை,
முன்னொரு காலத்தில் நந்தி, சிவனை, அவர் நினைத்த இடத்திற்கெல்லாம் அழைத்துச் சென்றது. அப்போது, பார்வதிதேவி மயில் உருவமெடுத்து பூலோகத்தில் சிவபூஜை செய்து கொண்டிருந்தாள். இதைக் காண பிரம்மா அன்ன வாகனத்திலும், பெருமாள் கருடன் மீதும், மற்ற தேவர்கள் குதிரைகளிலும் வந்தனர். ஆனால், நந்தி, சிவனின் அருளால், மற்ற வாகனங்களை விட வேகமாக சிவனைச் சுமந்தபடி வந்தது. இதையடுத்து, நந்திக்கு, நம்மால் தான் உலகையே ஆளும் சிவபெருமான் கூட, விரைவாக செல்ல முடிகிறது என்ற கர்வம் ஏற்பட்டது.
இதையறிந்த சிவன்,”நந்தி! என்னால் தான் நீ பெருமையடைகிறாய் என்பதை மறக்காதே” என்று கூறி தன் சடைமுடி ஒன்றை எடுத்து அதன் முதுகில் வைத்தார். அதன் பலம் தாங்காத நந்தி, மயக்கமடைந்து விழுந்தது. இதைப்பார்த்த சிவன் கருணை உள்ளத்துடன், “நந்தி. என்னை குறித்து உன்னிடம் கர்வம் ஏற்பட்டு விட்டது. இந்த பாவத்தை நீக்க, பூலோகத்தில் காவிரிக்கரையில் நீயும் தவம் செய். நான் குரு வடிவாய் (தெட்சிணாமூர்த்தி) காட்சியளிப்பேன்.
நீ காவிரியில் நீராடி வில்வத்தினால் தினமும் என்னை பூஜித்தால் நன்மை உண்டாகும். அதன்பின் என்னை வந்து அடையலாம்” என்று கூறினார். அதன்படி நந்தி, தவம் செய்ய, சிவனும் குரு வடிவாய் காட்சியளித்து, இறைவனே உயர்ந்தவன் என்ற ஞானத்தை வழங்கினார்.
அப்போது நந்தீஸ்வரர், “குரு வடிவாக காட்சி தந்த சிவனே, இத்தலத்தில், தாங்கள் என்மீது அமர்ந்து அருள்பாலிக்க வேண்டும். எப்போதும் உங்கள் எதிரில் இருக்கும் பாக்கியத்தையும் தந்தருள வேண்டும்” என்றார். எட்டு பாடல்களால் துதித்தார்.
நந்தியின் விருப்பத்தை ஏற்ற சிவன், ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தார். “வதாரண்யேஸ்வரர்” என்ற பெயரில், “ஞானாம்பிகை“யுடன் அமர்ந்தார். அத்தலம் மயிலாடுதுறையில் உள்ளது. சிவசன்னதி எதிரில் தான் நந்தியை பார்த்திருப்பீர்கள். ஆனால், இங்கு தெட்சிணாமூர்த்தி எதிரில் நந்தி பணிவுடன் அமர்ந்துள்ள அரிய காட்சியைக் காண முடியும்.
நந்தி பாடிய 8 பாடல்களை பாடி தெட்சிணாமூர்த்தியை வழிபடுவோருக்கு, சகல தோஷங்கள், பாவங்கள், ஆணவம் நீங்கி ஞானம் கிடைக்கும். வியாழ பகவான்(குரு) தன்னை வழிபடுவோரின் கஷ்டங்களை போக்கும் வரத்தை, இத்தல தெட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து பெற்றதாக தல புராணம் கூறுகிறது. குருவினால் வணங்கப்பட்ட இத்தலம் குரு பரிகாரத்திற்கு சிறந்த ஸ்தலமாக விளங்குகிறது.
காவிரியில் நந்தீஸ்வரர் நீராடிய இடம் இப்போதும் “ரிஷப தீர்த்தம்” என அழைக்கப்படுகிறது. ஆற்றின் நடுவே நந்தி கோ யில் உள்ளது.
இத்தீர்த்தத்தில் நீராடினால் கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, தாமிரபரணி ஆகிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம், குருக்ஷேத்ரம், பிரயாகை மற்றும் புண்ணியத்தலங்களில் தானம் செய்த பலன்,
பதினெட்டு புராணங்கள் படித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
கோயிலின் வடக்கே “ஞான புஷ்கரணி” தீர்த்தம் உள்ளது. குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் நீராடுகிறார்கள்.
சப்தமாதர்களில் ஒருவரான சாமுண்டி, மகிஷனை கொன்ற தோஷம் நீங்க இத்தலத்தில் பூஜித்திருக்கிறாள்.
இத்தலத்தில், தெட்சிணாமூர்த்தி “மேதா தெட்சிணாமூர்த்தி” என்ற திருநாமத்துடன் அருளுகிறார். குரு பெயர்ச்சியை ஒட்டி இங்கு சிறப்பு பூஜை நடக்கும்.
திருவிழா:
ஐப்பசியில் துலா மாத விழா, ஐப்பசி அமாவாசை, கார்த்திகை கடைசி வியாழன் தெட்சிணாமூர்த்தி மகா அபிஷேகம்.
கோரிக்கைகள்:
திருமணத்தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், கல்வியில் சிறந்து விளங்கவும் குருவை வழிபடுவது சிறப்பு.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்,