சென்னை: கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதுபோல சென்னையில் குறும்பட இயக்குனர் ஒருவர் வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து புழல் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை, செந்தில் பாலாஜியின் வீடு அமைந்துள்ள கரூர் மாவட்டம் மண்மங்களத்தை அடுத்த ராமேஸ்வரப்பட்டிக்கு ஒரு காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர், அங்குள்ள செந்தில்பாலாஜியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வீட்டில் அவரது தாய், தந்தையர் வசித்து வருகின்றனர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே இந்த வீட்டில் பல முறை வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடைபெற்ற நிலையில் மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த முறை எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் செந்தில் பாலாஜி தாய், தந்தையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை முடியும் வரை, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கு தொ டர்பான அமலாக்கத்துறையின் விசாரணையை தள்ளிவைக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பை வரும் 15-ந்தேதிக்கு நீதிபதி அல்லி ஒத்திவைத்தார். இந்த சூழலில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்புக்கு இடையில், சென்னையில் என்ஐஏ சோதனையும் நடைபெற்று வருகிறது. சென்னை கொளத்தூர் பகுதியில் வசித்து வரும் குறும்பட இயக்குநர் முகில் சந்திரா என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பில் இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்.