ராஞ்சி
இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தை ஆளும் கூட்டணி அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஹேமந்த் சோரன் முதல்வராகச் செயல்பட்டு வந்தார்.
கடந்த 31 ஆம் தேதி, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. எனவே ஜார்க்கண்ட் புதிய முதல்-மந்திரியாக சம்பாய் சோரன் பதவியேற்றார்.
ஆளுநர் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
ஆகவே சம்பாய் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. சட்டசபையில் மொத்தம் 80 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க 41 உறுப்பினர்கள் ஆதரவு அவசியம் ஆகும்.
காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – ராஷ்டிரிய ஜனதா தளம் சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையுடன் உள்ளதால் சம்பாய் சோரன் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிச்சயம் நிரூபிக்கும் எனக் கூறப்படுகிறது.