சிறப்பு கட்டுரை:
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன்…
ஏராளமான இளம் வயது ரசிகர்களை பின்புலமாகக் கொண்ட நடிகர் விஜய் அரசியலுக்குள் நுழைந்திருக்கிறார்.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை அறிவித்ததோடு மட்டுமின்றி, ஒப்புக்கொண்ட படங்களை நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியலுக்கு வரும்போதெல்லாம் சலசலப்புக்கு பஞ்சமே இருப்பதில்லை.
அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு நிகராக திரைத்துறையில் செல்வாக்கு பெற்றுள்ள நடிகர் விஜயின் வரவு, ரஜினியை போல் வழ வழா கொழ கொழா என்றில்லாமல் விஜயகாந்தின் உடனடி விஜயம் போல் அமைந்துள்ளது.
நடிகர்-கம்-அரசியல் என்றாலுமே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது உச்சபட்ச வெற்றியின் அடையாளமாக திகழும் எம்ஜிஆரைத்தான்.
ஏனெனில் தன்னை எம்ஜிஆராக நினைத்துக் கொண்டு தனிக்கட்சி ஆரம்பித்து காணாமல் போன நடிகர்கள் ஏராளம்.. ஏராளம்..
எம்ஜிஆரின் விஷயத்தில் எல்லோரும் வசதியாக மறந்து விடுவது, அவர் நடிகராக இருந்தபடி திமுகவில் தன்னை தொண்டனாக இணைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகாலம், திரைப்படங்களில் அந்தக் கட்சியின் கொள்கைகள், கொடி, சின்னத்தை பாமர மக்களிடம் கொண்டு சேர்ப்பதை முக்கிய கடமையாக வைத்திருந்தவர் என்பதைத்தான்..
தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நான்கு முறை திமுகவின் நட்சத்திரமாக சட்டமன்ற தேர்தல்களின் போது பிரச்சார பீரங்கியாய் முழங்கியவர்.
முதலில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், அதன் பிறகு தேர்தல் களத்தில் இரண்டு முறை நின்று சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்றவர்.
எல்லாவற்றையும் விட திமுகவில் மூன்றாவது பெரிய பதவியான பொருளாளர் அளவுக்கு உயர்ந்தவர்.
இவ்வளவு பின்பலத்தோடு இருந்ததால்தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டபோது, ஒரு கை தேர்ந்த அரசியல்வாதியா தனக்காக கட்சி ஆரம்பித்து இந்த உலகை விட்டு மறையும் வரை வெற்றிகளாக குவித்துவிட்டு போனார்.
அரசியலைப் பொறுத்தவரை வெற்றியை எட்டுவதற்கு ஒவ்வொருவரின் செல்வாக்கு மற்றும் அந்தந்த. கால சூழ்நிலை ஆகியவை இரண்டு அடிப்படை அம்சங்கள்.
இவை இரண்டும் ஒரே நேரத்தில் கை கொடுக்க வேண்டும். ஒன்று தாழ்ந்து போனாலும் சிக்கல்தான்.
அறிஞர் அண்ணா கட்சி ஆரம்பித்து 18 ஆண்டுகள் கழித்து ஆட்சியை பிடித்தார். அவரைப் போலவே தனிக்கட்சி கண்ட எம்.ஜி.ஆரோ ஆட்சியைப் பிடிக்க 5 ஆண்டுகள் மட்டுமே எடுத்துக் கொண்டார்.
ஆனால் எம்ஜிஆரை விட அதிக வேகத்தில் சாதித்தவர் ஆந்திராவின் என்டி ராமராவ்.
கிருஷ்ணரின் அவதாரம் என்றே ஆந்திர மக்களால் நேசிக்கப்பட்ட என். டி.ஆர், கட்சி ஆரம்பித்த பத்தே மாதங்களில் ஆட்சியைப் பிடித்தார்.
மூன்றே ஆண்டுகளில், ஒரு மாநிலக் கட்சியயை நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சியாகவே வரக்கூடிய அளவில் தனது தெலுங்கு தேசம் கட்சியை உயர்த்தினார்.
இந்திராகாந்தி மறைவையொட்டி நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தலில் அனுதாப அலையையும் மீறி என்.டி.ஆர். இதனை சாதித்து காட்டினார்.
ஆனால் அரசியலில் அடிக்கடி துரோகங்களை சந்தித்ததால் ஆட்சியை இழக்கும் நிலைமைக்கும் தள்ளப்பட்ட பரிதாபத்துக்குரியவர் என்டிஆர்.
அபரிதமான மக்கள் செல்வாக்கு காரணமாக தொடர் வெற்றிக்கு எம். ஜி. ஆர். உதாரணம் என்றால், வெற்றிகளை குவித்தாலும் சூழல் கை கொடுக்காவிட்டால் அத்தனையும் சேதம் ஆகிவிடும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் என்டிஆர்.
திரைத்துறையில் இருந்து தனிக்கட்சி தொடங்கி வெற்றி அடையாமல் போனவர்கள் மத்தியில் வித்தியாசமானவர் விஜயகாந்த்.
அரசியலுக்கு இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காமல் வந்தார், கட்சியை ஆரம்பித்தார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக வரும் அளவுக்கு உயர்ந்தார்.
ஆனால் அரசியலில் காய் நகர்த்தல் வித்தை தெரியாததால் சொந்தக் கட்சிக்காரர்களின் துரோகத்தாலே பின்னடைவை சந்தித்தார். கூடவே அவரது உடல்நிலை தொடர்ந்து வாட்டி வதைத்து வதைத்து கடைசியில் அவரை நிஜ வாழ்விலேயே இல்லாமல் செய்து விட்டது.
இப்போது நடிகர் விஜய் மேட்டருக்கு வருவோம்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வெற்றியும் இல்லாமல் படுமோசம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு தோல்வியும் இல்லாமல் கணிசமான வாக்குகளை வைத்திருப்பவர் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.
யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளாமல் ஓட்டை பிரிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு இன்னாருக்கு B- டீமாக செயல்படுகிறார் என்று சீமானுக்கு எதிராக விமர்சனங்கள் தொடர்ந்து உண்டு.
தனியாக கட்சி தொடங்கிய நடிகர் கமலஹாசன் ஆற்றிலும் ஒருகால் சேற்றிலும் ஒருகால் என பார்ட் டைம் அரசியல்வாதியாக இருந்து கொண்டு முழு அரசியல்வாதி என்ற தகுதியை இழந்துகிடக்கிறார்.
இப்போது அரசியலுக்குள் நுழைந்திருக்கும் நடிகர் விஜய்யின் அரசியல் எப்படி இருக்கும் என்பதை இனிதான் பார்க்க வேண்டும்.
பெரும்பாலானோர் சொல்வதைப்போல நிர்வாக சீர்கேடுகள் ஊழல் என்று ஆரம்பித்திருக்கிறார் விஜய். இந்த வளையத்தில் நின்று கொண்டு யார் வேண்டுமானாலும் சுலபமாக ஆடலாம், ஆட்சி அதிகாரத்தை பிடிக்காத வரை.
ஆனால் தமிழகத்தைப் பொறுத்தவரை வாக்கு அரசியல் என்று வந்துவிட்டால் சமூக நலத் திட்டங்கள், சமூக நீதி, மொழிக் கொள்கை போன்றவை பிரதானமாக பார்க்கப்படும். இந்த வளையத்திற்குள் நின்று தினம் தினம் ஆடுவதுதான் கடினமான காரியம்.
சமூக வலைத்தளங்கள் தலைவிரித்தாடும் இந்த காலகட்டத்தில், எல்லா விஷயங்களிலும் தெளிவான பார்வையை சொல்லாவிட்டால் சுற்றி நிற்கும் எதிர் தரப்பு துவம்சம் செய்து விடும்.
யாருடைய பின்னியக்கமும் இல்லாமல் தன்னை மட்டுமே நம்பி அரசியலில் சாதிக்க விரும்புபவருக்கு முதல் தேவை, தெளிவான அரசியல் சித்தாந்தம்.
இரண்டாவது தனது அரசியல் சித்தாந்தத்திற்கு எதிரான எதிரியை அடையாளம் கண்டு அரசியல் களமாடுவது.
யாரையும் பகைத்துக் கொள்ள விரும்பாமல் எல்லோருக்கும் நல்லவராக இருக்க, விரும்பினால் மூடு விழாதான்.
அப்புறம் களப்பணி விவகாரம். மக்கள் மத்தியில் ஏக புகழ் பெற்றிருந்தும் இந்தக் களப்பணி மற்றும் செலவை எதிர்கொள்ள முடியாமல் போதும்டா சாமி என்று ஓடிப்போனவர்கள் நிறைய, நடிகர் திலகம் சிவாஜி உள்பட.
மக்கள் மத்தியில் கிடைக்கும் புகழை அரசியலுக்கு மடை மாற்றி வெற்றி காண்பது என்பது மிக மிக கடினமான காரியம். ஆனால் முடியவே முடியாத காரியம் அல்ல.
நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் வெற்றிகரமாக அமையுமா அமையாதா என்பதைக்காண நீண்ட காலம் காத்திருக்க தேவையில்லை.
காரணம் ஆதரவைவிட, போட்டு வெளுக்கும் எதிர் தரப்புதான் இப்போது அதிகம். அதனால்?
மறுபடியும் போய் தலைப்பை படியுங்கள்..