சென்னை: இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு வரும் 8ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில்) அடங்கிய உதவி பயிற்சி அலுவலர் சுருக்கெழுத்து – ஆங்கிலம் மற்றும் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION) 2023ம் ஆண்டு தேர்வு நடத்தி, தேர்வு முடிவுகளையும் வெளியிட்டது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 8ந்தேதி நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் கோபால சுந்தரராஜ் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து ஆங்கிலம்) மற்றும் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்துக்கான எழுத்துத்தேர்வு கடந்த அக்டோபர் 5, 6ம் தேதிகளில் நடைபெற்றது. இதில் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் நவம்பர் 28ல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு வருகிற 8ம் தேதி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கிறது.
இதற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை எண், இட ஒதுக்கீட்டு விதி, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பிற்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் மட்டுமே தகவல் தெரிவிக்கப்படும். அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது. விண்ணப்பதாரர் எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப பணி நியமனம் வழங்கப்படும். அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது. பங்கேற்க தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.